முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோட்டக்கலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிள்:கலெக்டர் வா.சம்பத், நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் செய்தியாளர் பயணம் ஆத்தூர் வட்டம், கருமந்துறை பகுதியில் கலெக்டர் வா.சம்பத்,  தலைமையில் நடைபெற்றது. இந்த  செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது.

பருவமழை தமிழகத்தில் போதிய அளவு பெய்யாத காரணத்தால் தமிழக அரசு விவசாயிகள் நுண்ணுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்திட மானியம் வழங்கி வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கென நுண்ணுநீர் பாசனத்திற்கு அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கும் 100ரூ மானியம் வழங்கப்படுகிறது.

உயர்ரக வீரிய காய்கறிகளை உயர்தொழில் நுட்ப முறையில் குறிப்பாக நிலபோர்வை அமைத்து சொட்டு நீர் பாசனம் மூலம் காய்கறி சாகுபடி செய்யும் போது விவசாயிகளுக்கு   “இரண்டு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்”  கிடைக்கிறது. மேலும், தரமான விலைப்பொருட்கள் கிடைப்பதுடன், களை கட்டுப்பாடு, நீர் மற்றும் உர மேலாண்மை பூச்சிக்கட்டுப்பாடுகள் குறைகிறது. இதனால் உற்பத்தி செலவும் குறைந்து, லாபம் அதிகரிக்க வழிவகை செய்யப்படுகிறது. மேற்கண்ட நிலபோர்வை அமைத்திட அனைத்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மேலும், நிரந்தர கால்பந்தல் அமைத்து கொடிவகை சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியமாக ஹக்டோருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மா, கொய்யாவில் அடர்நடவு செய்யவும், பப்பாளி போன்ற பழ வகை கன்றுகள் விவசாயிகளுக்கென இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், பழைய மா மரங்களை கவாத்து செய்து விளைச்சலை அதிகரிக்க 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெங்காயம் உற்பத்தியில் உயர் விளைச்சல் பெரும் வகையில் வெங்காய விதைகள் மற்றும் இடுபொருட்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், உதிரி மலர்கள் சாகுபடி செய்ய மானிய விலையில் மல்லிகை செடிகள் அரசு தோட்டக்கலைப்பண்ணைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

மானாவாரி நில மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் மானாவரி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மா ஒட்டு கன்றுகள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்ய பயிறு வகை பயிர்கள் மற்றும் மரவள்ளி சாகுபடியில் பயிறு வகை பயிர்கள் பயிர் செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் மானியம் தோட்டக்கலைத்துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

மூலிகை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மருந்து கூர்கன் (கோழியாஸ்) சாகுபடி செய்ய ஹக்டேருக்கு ரூ.18,600 வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், பழங்கள் மற்றும் காய்கறி பயிர்களில் பூச்சி மேலாண்மை திட்டமானது பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பூச்சிக்கட்டுபாடு மட்டும் நோய்களை கட்டுப்படுத்தி சுற்றுசூழலை காத்திட விளக்கு பொறி, இன கவர்ச்சி பொறி, மஞ்சல் நிற ஒட்டு பொறிகளை கொண்டு பூச்சிகளை கட்டுபடுத்தப்படுகிறது. இதில் விளக்கு பொறிக்கென 50 சதவீதம் மானிமும், இனகவர்ச்சி பொறி, மஞ்சள் நிற ஒட்டு பொறிகளுக்கு 30 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. 

தேனீ வளர்ப்பு மூலம் விவசாயிகள் உற்பத்தி பெருக்கும் நோக்கோடு 40 சதவீத மானியத்தில் ஒரு தேனீ கூட்டத்துடன் உள்ள தேனீ பெட்டிக்கு ரூ.1,600 வீதம் வழங்கப்படுகிறது. குளித்தட்டு முறையில் மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்யும் வகையில் நிழல்வலைகுடில்கள் அமைத்து மஞ்சள் நாற்று உற்பத்தியை அதிகரித்திட 50 சதவீத மானியத்தில் 400 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ரூ.1.42 லட்சமும், மேலும் இத்திட்டத்தின் கீழ் விவசாய பெருமக்கள் பயனடைந்திட இடுப்பொருட்களுக்காக ரூ.14,750, பயிற்சிக்காக ரூ.1000 வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

இது போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசால் தோட்டக்கலைத்துறையினரால் செயல்படுத்தப்படும் சொட்டு நீர் பாசன திட்டங்களால் வறட்சியான சூழ்நிலைகளில் குறைவான நீரை பயன்படுத்தி விவசாயிகள் லாபம் பெறுவதுடன், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பம் உள்ள விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்,  தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் பயணத்தில் இணை இயக்குநர்(வேளாண்மை) சௌந்தரராஜன், துணை இயக்குநர் (தோட்டகலை) பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுவாமிநாதன், தோட்டக்கலை அலுவலர் கணேசன்  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.கு.சதீஸ்குமார், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்