திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் ஸ்வைப் மெஷின் மூலம் பணம் செலுத்தும் வசதி

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      தூத்துக்குடி
tcr swibe 1

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் பணம் செலுத்துவற்கு பதிலாக, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து ஸ்வைப் மெஷின் மூலம் பணம் செலுத்தும் வசதி நேற்று துவங்கப்பட்டது.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தற்போது பணமில்லாத பரிவர்த்தனையான ஸ்வைப் மிஷின் மூலம் பொருட்கள் வாங்கிடவும், வணிகம் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சிறு, பெரு வணிகமையங்களில் ஸ்வைப் மிஷின்கள் மூலம் பண பரிவர்த்தனைகள் நடக்க துவங்கி விட்டது. இதனடிப்படையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கை பணத்தை வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செலுத்திட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் கனரா வங்கியில் இருந்து இரண்டு ஸ்வைப் மெஷின்கள் திருக்கோவில் சண்முக விலாச மண்டபத்தில் வைக்கப்பட்டது. அந்த ஸ்வைப் மிஷின்களின் செயல்பாட்டினை திருக்கோவில் இணை ஆணையர் வரதராஜன் தலைமையில், கனரா வங்கியில் துணை மண்டல மேலாளர் மகேந்திரன் நேற்று துவக்கிவைத்தார். தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது: டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை செயல் படுத்தும் நோக்கத்தில் திருக்கோவில் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் பயனாக எங்கள் வங்கியின் மூலம் இரு ஸ்வைப் மிஷின்கள் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்கள் தாங்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தினை இந்த மெஷின்களின் மூலம் செலுத்தலாம். இதனால் பக்தர்கள் அதிகமாக பணம் கைகளில் எடுத்து வரும் சிரமம் தவிர்க்கப்படும். இந்த மெஷின் மூலம் பக்தர்கள் செலுத்தும் பணம் உடனடியாக திருக்கோவில் கணக்கில் வரவாகிவிடும். எனவே திருக்கோவில் நிர்வாகத்திற்கு அடிக்கடி உண்டியல்களில் சேரும் பணத்தினை எண்ணும் பணியும் இலகுவாகிவிடும். பொதுவாக ஸ்வைப் மிஷின் பயன் படுத்தும் வணிக நிறுவத்திடமிருந்து வங்கிகளினால் மாதக்கட்டணம் மற்றும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும், ஆனால் திருக்கோவில் நிர்வாகத்திற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்காமல் இலவச சேவை வசதி செய்துள்ளோம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கனரா வங்கி கிளை மேலாளர் ரத்தினசாமி, திருக்கோவில் உள்துறை கண்காணிப்பாளர் பத்மநாபன், தலைமை கணக்கர் அம்பலவாணன், மணியம் ரமேஷ், ராமசாமி, கணக்கர் முருகேசன், திருக்கோவில் பணியாளர்கள் மோகன்ராஜ், சிவா, சரவணன், கிட்டுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: