காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம், கண்ணன்தாங்கல் கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
kanchi

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம், கண்ணன்தாங்கல் கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். மத்திய குழுவில் திரு.டாக்டர்.பி.கணேஷ்ராம் ஆராய்ச்சி அதிகாரி, ரத்னபிரசாத் - டி.ஜி.எம்.இந்திய உணவு பாதுகாப்பு கழகம், மீன்வளர்ச்சித் துறை ஆணையர் டாக்டர்.பால்பாண்டியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.  சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் டாக்டர்.சி.என்.மகேஸ்வரன்., உடனிருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 7 வட்டாரங்களில் வறட்சியால் 10700 ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் சிறு, குறு விவசாயிகள் 5561 பேரும், இதர விவசாயிகள் 1259 பேரும் மொத்தம் 6820 விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டாரங்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், செய்யப்பட்ட புகைப்படங்கள் கொண்ட கண்காட்சியை  பார்வையிட்ட குழுவினரிடம் குறும்படம் மூலம் வறட்சி பாதிப்பு குறித்து சார் ஆட்சியர் அருண்தம்புராஜ்., விரிவாக எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடிய குழுவினர் விவசாயிகளின்  குறைகளை கேட்டறிந்தனர். பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறித்தும், நீர் ஆதாரம் குறித்தும், பயிர்கள் குறித்தும் கேட்டறிந்தனர். மாவட்டத்தில் சாகுபடி மேற்கொள்ளப்படும் நெல் மட்டுமின்றி மாற்றுப் பயிர்களாக வறட்சியை தாங்கக்கூடிய  பயிர் வகைகளை அறிந்து சாகுபடி மேற்கொள்ளும்படி விவசாயிகளை கேட்டுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன், வேளாண்மை இணை இயக்குநர் வி.சீத்தாராமன் மற்றும் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அனைத்து வருவாய் துறை அலுவலர்கள், கால்நடைப்  பராமரிப்பு துறை அலுவலர்கள் மற்றும் திராளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: