வறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி? வேளாண்மை இணை இயக்குனர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சராசரி மழையை விட 60 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் போதுமான மழை பெய்யாததால் மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மானாவாரி பயிர்கள் அனைத்தும் தண்ணீர் பற்றாக்குறைவால் மகசூல் குறைந்து கால்நடைகளுக்கும் தீவனத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் சாகுபடி செய்யப்படும் பயிர்களிலும் தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வறட்சியின் கோரப்பிடியில் இருந்து பயிர்களை பாதுகாக்க கீழ்வரும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்கலாம்.

நெகிழி அல்லது கரும்புத்தோகை

கிணறு, ஆழ்துளை கிணறு மற்றும் இதர நீர்ப்பாசன ஆதாரங்களில் கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின்சாரம் உள்ளபோது தவறாமல் தண்ணீர் பாய்ச்சுதலை உறுதிசெய்ய வேண்டும். சோலார் போன்ற சூரியசக்தியால் இயங்கும் மோட்டார்களை பயன்படுத்தலாம். இதற்காக வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் மானியத்தை விவசாயிகள் பெற்று பயன்அடையலாம்.  நெகிழி அல்லது கரும்புத்தோகை போன்றவற்றை வைத்து மூடாக்கு ஏற்படுத்துவதன் மூலம் நீர் ஆவியாதலை தடுக்க முடியும். இதனால் மண்ணில் ஈரப்பதம் தொடர்ந்து இருக்கும்.  இலைவழி என்று அழைக்கப்படும் பாக்டீரியா கரைசலை பூம் தெளிப்பான்கள் மூலம் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் கரைசலை இலைப்பரப்பில் நன்றாக படும் வகையில் தெளிக்க வேண்டும். மேலும், கதிர் வெளிவரும் நிலையிலும் தெளிக்கலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் பி.பி.எப்.எம். கிடைக்கும். இது ஒரு லிட்டர் ரூ.300–க்கு விற்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம்

 கடுமையான வறட்சி நிலவி வருவதால் விவசாயிகள் ரசாயன உரங்கள் அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும். இயற்கை உரம், ஊட்டமேற்றிய தொழுஉரம், உயிர் உரம், உயிரியல் பூச்சி, பூச்சிக்கொல்லிகள், பஞ்சகாவ்யா, வேர் உட்பூசணம் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.  பாசன தண்ணீரை தரைவழியாக எடுத்து செல்லாமல் குழாய்கள் மூலம் கொண்டு சென்றால் நேரடியாக பயிர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வீணாகுவது தடுக்கப்படும்

 சொட்டு நீர்பாசனம், தூவல் பாசனம், மழை தூவுவான் போன்ற பொருட்களை பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை 3 ஏக்கருக்கு பயன்படுத்தலாம். இவை வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், 5 ஏக்கருக்கு அதிகமாக வைத்து உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

ஹைட்ரோஜெல் பயன்படுத்தும் முறை

 பரிந்துரைக்கப்பட்ட பூசா ஹைட்ரோஜெல் இடுவதினால் வறட்சி மேலாண்மை மற்றும் நீர் பற்றாக்குறை மேலாண்மையை எளிதில் செயல்படுத்த முடியும். ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிருக்கு 1 கிலோ ஹைட்ரோஜெல்லும், மணற்பாங்கான நீர்பிடிப்பு திறன் குறைவாக உள்ள இடத்தில் ஏக்கருக்கு 2 கிலோ ஹைட்ரோஜெல்லும் பயன்படுத்த வேண்டும். பலன்தரும் பழவகை மரங்கள் உள்ள தோட்டங்களிலும், தென்னை மரத்தோப்புகளிலும் கூடுதல் அளவு இட வேண்டும். தேவைப்படும் அளவு ஹைட்ரோஜெல்லை 10 கிலோ மண் அல்லது எருவுடன் கலந்து சீராக தூவவேண்டும்.இந்த தகவலை ஈரோடு வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராம.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: