முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதிய ஜனதாவை மக்கள் படுதோல்வி அடையச்செய்வார்கள்-அகிலேஷ் யாதவ்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ,ஜன.26. உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வை மக்கள் படுதோல்வி அடையச்செய்வார்கள் என்று மாநில முதலவர் அகிலேஷ் யாதவ் கூறினார். உத்திரப்பிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 298 தொகுதிகளிலும் காங்கிரஸ் 105 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தை இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து முதன் முதலாக கெகிம்பூர் கெரியில் பொதுக்கூட்டம் நடத்தின. இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் கட்சி தலைவர்களில்  ஒருவருமான பிரகாஷ் அகர்வால் மற்றும் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை மக்கள் படுதோல்வி அடையச்செய்வார்கள். சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும். பாரதிய ஜனதாவின் மக்கள் விரோத நடவடிக்கையால் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது  என்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்ததால் வங்கிகளில் பணத்தை எடுக்க  நாடே கியூ வரிசையில் நிற்கிறது. அதேசமயத்தில் அவர்களின் சிரமத்தை மத்திய பா.ஜ. அரசு கண்டு கொள்ளவில்லை.

என் மாநிலத்தில் மக்களின் சிரமத்தை போக்க என் தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்து  சிரமத்தை போக்கி வருகிறது. தேர்தலில் என் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி சின்னமான சைக்கிளும் காங்கிரஸ் சின்னமான கையும் சேர்ந்து சைக்கிளை இன்னும் வேகமாக ஓட்ட முடியும். அதாவது இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சி அமையும்போது மக்கள் நல வடிக்கைகளை விரைந்தும் வேகமாகவும் எடுக்க முடியும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார். முதல் தேர்தல் பிரசார கூட்டமாக இருந்ததால் கூட்டத்தில் இருகட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்