நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும்:கலெக்டர் மு.ஆசியா மரியம் வேண்டுகோள்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      நாமக்கல்
4

நாமக்கல்  மாவட்டம், நாமக்கல்  நகராட்சி திருமண மண்டபத்தில்   தேசிய வாக்காளர் தின விழா கலெக்டர் மு.ஆசியா மரியம்  தலைமையில் சிறப்பாக   கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்காளர் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து கலெக்டர் அவர்கள் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளார் அடையாள அட்டைகள் வழங்கியும், மாவட்ட அளவில் பள்ளி கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசும் போது தெரிவித்தாவது.ஜனநாயக நாடான இந்திய அரசினை தேர்ந்தெடுப்பதில் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 18 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமகனும் வாக்காளர் அடையாள அட்டை வைத்துக் கொள்வது அவசியமாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளால் வாக்காளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவரை தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளாத  18 வயது நிரம்பிய மாணவ, மாணவியர்கள் உங்கள் பகுதியைச் சேர்ந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தகுந்த சான்றுகளுடன் சென்று படிவம் 6 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க றறற.நடநஉவழைளெ.வn.பழஎ.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 05.01.2017 அன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி 6,75,123 ஆண் வாக்காளர்களும், 7,04,147 பெண் வாக்காளர்களும், 111 இதர வாக்காளர்களும் என மொத்தம் 13,79,381 வாக்காளர்கள் உள்ளனர். 18 வயது நிறைவடைந்த ஒவ்வொரு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் உள்ளிட்டவைகளை படிவங்கள் மூலம் பூர்த்தி செய்து அந்தந்த பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களிலோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திலோ மாற்றிக் கொள்ளலாம் என்றார்.முன்னதாக நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் மு.ஆசியா மரியம்  கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் ஸ்ரீரெங்கேஸ்வரா கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திச் சென்றனர். இப்பேரணியானது மணிக்கூண்டு பேருந்து நிலையம், திருச்சி சாலை வழியாக நகராட்சி திருமண மண்டபத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.இராஜசேகரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சுப்பிரமணி, நாமக்கல் வட்டாட்சியர் சுகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் கண்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், ஸ்ரீரெங்கேஸ்வரா கல்வியியல் கல்லூரி, சுப்பிரமணியம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: