வர்தா புயலால் விழுந்த மரங்களுக்கு பதிலாக 3 மடங்கு மரங்களை நட தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      சென்னை
G pundi

வர்தா புயலால் திரளான மரங்கள் விழுந்த நிலையில் அந்த எண்ணிக்கையின் 3 மடங்கு அளவு மரங்களை ஆங்காங்கே நட்டு பராமரிப்பது என்று புதுகும்மிடிப்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

 

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுலக அதிகாரி ருத்ரமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மகளிர் குழுவினர், பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

 

கூட்டத்தில் சுகாதாரத்தை பேணிக் காப்பது, சுற்றுச்சூழலை காப்பது குறித்து ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் புதுகும்மிடிப்பூண்டியில் வர்தா புயலின் போது நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்த நிலையில் விழுந்த மரங்களின் எண்ணிக்கையின் மூன்று மடங்கு அளவு மரங்களை நட்டு பராமரிப்பது என தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் ஊராட்சியில் தெருக்களில் கழிவுநீரை விடும் வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிப்பது என்றும், புதுகும்மிடிப்பூண்டியில் அம்மா பூங்கா, அம்மா உடற்கூடத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதுடன், புதுகும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் ஊராட்சி வளாகத்தில் கொட்டப்படக்கூடாது என தீர்மானம் இயற்றப்பட்டது.

 

அதே போல கீழ்முதலம்பேட்டில் ஊராட்சி செயலாளர் சாமுவேல் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சியில் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் மின்மோட்டார் மூலம் குடிநீரை வீடுகளுக்கு கொண்டு சென்றால் ஊராட்சி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், திறந்வெளியில் யாரும் இயற்கை உபாதையை கழிக்க கூடாது என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.

 

அதே போல ஆரம்பாக்கத்தில் ஊராட்சி செயலாளர் முரளி தலைமையிலும், ரெட்டம்பேட்டில் ஊராட்சி செயலாளர் குருமூர்த்தி தலைமையிலும், தோக்கமூரில் மூர்த்தி தலைமையிலும், நாயுடுகுப்பத்தில் சோபன்பாபு தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: