முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேக விழா முன்னேற்பாடுகள்:கலெக்டர் எஸ்.பி. நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 6ந் தேதி காலை 9.05 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், பேகோபுரம், அம்மணிஅம்மன் கோபுரம் உள்பட 9 கோபுரங்களின் மீதும் அமைக்கப்பட்டுள்ள கலசங்களுக்கு புனிதநீர் கொண்டு செல்ல தேவையான வசதிகள் செய்யபபட்டுள்ளன. மேலும் கோவில் முழுவதும் வண்ண சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. வரும் 31ந் தேதி முதல யாக சாலை பூஜைகள் தொடங்குவதை முன்னிட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்நிலையில் மகாகும்பாபிஷேக அழைப்பிதழை கோவில் நிர்வாகத்தின் சார்பில் இணை ஆணையிர் சி.ஹரிபிரியா மற்றும் அறநிலையத்துறை உயரதிகாரிகள், தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திடம் அளித்தனர். அப்போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரடியாக குறித்து கொடுத்த தேதியில் நடைபெறும் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். இதையட்டி அண்ணாமலையார் கோவிலில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி ஆகியோர் விழா முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தனர். கோவில் மற்றும் போலீஸ் தரப்பில் இணைந்து நடத்தப்படும் அனுமதி சீட்டு வைத்திருப்போர் மட்டும் கோவிலுக்குள் அனுமதிப்பது  என அப்போது ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் நெரிசலில் சிக்காமல் முக்கிய பிரமுகர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள், கோபுரத்தின் மீது செல்ல விரும்பும் முக்கிய பிரமுகர்களை உரிய போலீஸ் துணையுடன் அழைத்துச் செல்வதற்கான முன்னேற்பாடுகள், ராட்சத நீர்தெளிப்பான்கள் மூலம் கும்பாபிஷேக புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது. மேலும் மகாகும்பாபிஷேகம் நடைபெறும் போது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவுவதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதேபோல் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, பயிற்சி சார் ஆட்சியர்கள், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் சி.பன்னீர்செல்வம், கோவில் இணை ஆணையர் சி.ஹரிபிரியா, உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்