முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஈ.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரியில் 57 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் வழங்கினார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      கோவை
Image Unavailable

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதி, சலங்கப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கவுந்தப்பாடி ஈ.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரியில் 57 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்யபாமா  முன்னிலையில்  சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  வழங்கினார்.

 

 சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  விலையில்லா மடிக்கணினிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி பேசியதாவது,

 

மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து  கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கும் உயர்கல்வி பெற வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர்.          பணக்காரர்கள் கையில் இருந்து வந்த மடிக்கணினிகள் இன்று ஏழைக்குடிசையில் வாழுகிற மாணவ, மாணவியர்களுக்கும் வழங்கி உலகத்தரம் மிக்க கல்வியை கிராமப்புறங்களில் வாழுகிற மாணவ, மாணவியர்களும் பெற்று உலக அளவில் ஒப்பற்ற வளர்ச்சியை காண வேண்டும் என்பதற்காக விலையில்லா மடிக்கணினிகள் வழங்குகிற திட்டத்தை மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். மடிக்கணினிகள் மூலம் தகவல்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை பெற்று உலக அளவில் போட்டியிடுகின்ற நிலையினை இன்று மாணவ, மாணவியர்கள் பெற்று வருகின்றனர்.

 

          தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ ஒப்பற்ற வளர்ச்சியினை தமிழகம் பெற வேண்டுமேயானால் கல்வியில் சிறந்து விளங்கவேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையோடு கல்வித்துறைக்கு ஆண்டு தோறும் ரூ.15,000 கோடி நிதியினை ஒதுக்கித்தந்து அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கி கல்வியறிவு பெறாதவர்களே இந்த தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள்.

 

கிராமப்புற மாணவ, மாணவியர்களும் முழுமையான கல்வியை இடைநிற்றலின்றி பெற வேண்டுமென மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  படிக்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மிதிவண்டிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, 4 செட் சீருடைகள், காலணிகள் என அனைத்தையும் விலையில்லாமல் வழங்கியுள்ளார்கள். அனைத்தும் விலையில்லாமல் வழங்குவதன் முக்கிய நோக்கமே கல்வி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சிறந்த கல்வியை பெறுவதை மட்டுமே முக்கிய நோக்கமாக கொள்ள வேண்டும். எனவே, மாணவ, மாணவியர்கள் அரசின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு சிறந்த கல்வியை பெறுவதோடு ஒழுக்கத்தோடு வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல கல்வியறிவும், சிறந்த ஒழுக்கமும் ஒரு மாணவரிடத்தில் இணைந்திருந்தால் அவன் சிறந்த மனிதனாக உருவாக முடியும். எனவே நன்றாக படியுங்கள், நல்ல அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.

 

அரசின் அனைத்து திட்டங்களையும் பெற்று, கவனமுடன் படித்து, வெற்றி பெறும்பொழுது வியந்துவிடாமல், தோல்வியுறும்பொழுது துவண்டு விடாமல் உங்களின் கல்வியை சிறப்பாக கற்றால் நீங்களும் பயனடையலாம். உங்களை ஈன்ற பெற்றோரும் பெருமகிழ்ச்சி கொள்வர். உற்றார் உறவினர்களும் உங்களை போற்றி புகழ்வர். எனவே மாணவ, மாணவியர்கள் நன்றாக பயில வேண்டும், நற்குணங்களோடு வாழ வேண்டும், வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறினார்.

 

        இவ்விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், ஈரோடு மாவட்டத்திற்கு பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் அபிஷேக் மீனா, டி.எஸ்.சேத்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார், ஈஐடி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர். எல். பூபதி, முதலியார் கல்வி நிறுவன தலைவர் யு.என்.முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்