முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை திட்டம் : அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்டம் கைளத்தூர் மற்றும் பெருமத்தூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமையும், ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை திட்டத்தையும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைக்கும் நிகழ்ச்சிகள் நேற்று (28.1.2017) நடைபெற்றது.

 

புதிய கட்டிடம்

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கைகளத்தூரில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதிஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் அதற்காக புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. தற்போது தற்காலிகமான கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து கைளத்தூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் பார்வையிட்டு பொதுமக்களிடம் மருத்துவமுகாம் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதா என்றும் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து வேப்பூர் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை திட்டத்தையும்; துவக்கிவைத்து, முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க, இந்த முன்னோடி திட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதிலும் குறிப்பாக மிகவும் பின்தங்கிய வட்டாராமாக கருதப்படும் வேப்பூரில் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவையை தொடங்கி வைப்பதன் மூலம் சாதாரண குடிமகனுக்கும் அரசின் சுகாதாரத்திட்ங்கள் சென்றடையும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு சுகாதாரத்திட்டங்களால் தமிழகம் சுகாதாரதத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்தும், இதன் மூலமாக பொதுமக்களுக்கு கிடைத்துள்ள சுகாதார வசதிகள் குறித்தும், இதன் மூலமாக சுகாதாரத்துறை பெற்ற பல்வேறு விருதுகள் குறித்தும் மேதகு தமிழக ஆளுநர் தற்போது நடைபெற்று வரும் சட்டன்றக் கூட்டத்தொடரின் துவக்கநாள் நிகழ்ச்சியில் சட்டமன்றத்தில் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

பச்சிளங்குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முழு அக்கறை கொண்ட தமிழக அரசு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அம்மா பரிசுப்பெட்டகத்தை வழங்கி வருகின்றது. டாக்டர் முத்து லெட்சுமிரெட்டி மகப்பேறுத்திட்டத்தின் கீழ் கர்பினித்தாய்மார்களுக்கு உடல்நலத்தை பேணிக்காக்கும் வகையில் ரூ.12,000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

ரூ.60 லட்சம்

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கைகளத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ரூ.60 லட்சம் நிதிஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையில் கையெழுத்திட்டவர் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தான். சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாவட்டமாக தமிழகம் விளங்கி வருகின்றது. பறவைக்காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை முழுமையாக கட்டுப்படுத்தி அனைவருக்கும் முழுமையான சுகாதாரத்தை தமிழக அரசு வழங்கி வருகின்றது.

கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. மேலும், மக்களைத்தேடி மருத்துவ சேவை என்ற உன்னத நோக்கத்தில் நடமாடும் மருத்துவக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் 8,806 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. அனைத்து சுகாதார நிலையங்களிலும் தலா ஒரு கிராம சுகாதார செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியரை நியமிக்க வேண்டும் என்ற நோக்கில் பரீட்சார்த்;த முறையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்திற்குட்பட்ட பெருமத்தூர் துணை சுகாதார நிலையத்தில் இரண்டு கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் தமிழ்நாட்டில் பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முறையே வேப்பூர், விராலிமலை மற்றும் சூளகிரி ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம் ஒரு செவிலியர் துணை சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும், மற்றொரு செவிலியர் கிராமப்பகுதியில் உள்ள அனைத்துப்பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களுக்குத்தேவையான அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என்பதுவேயாகும்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் தேசிய ஊரக சுகாதாரத்திட்ட இயக்குநர் தரேஸ் அஹமது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார். பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பி.மருதைராஜா(பெரம்பலுர்), மா.சந்திரகாசி(சிதம்பரம்), சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன்(பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன்(குன்னம்), பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்; மரு.சம்பத் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்