முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் சமுதாய கடமைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், வயலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நேற்று(31.01.2017) நடைபெற்றது.

 

கண்காட்சி

 

இம்முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை வாயிலாக சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

வருவாய்த்துறை சார்பில் முதியோர் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா நகல், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் மாற்றம், ஆண்வாரிசு இல்லை எனச்சான்று, இறப்புப்பதிவு – தடையின்மை சான்று, வாரிசு சான்று, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவை 248 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறை சார்பில் மரக்கன்று, நுண்ணூட்டச்சத்து ஆகியவை 5 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கும், புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் 15 பயனாளிகளுக்கும், ரூ. 75.56 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

.மேலும், தமிழக அரசு ஒவ்வொரு துறை வாரியாக திட்டங்களை தீட்டி பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பயன்படுமாறு செயல்படுத்தி வருகின்றன. குழந்தைகளின் ஆரம்பக்கல்வியை மேம்படுத்துவதற்காக அங்கன்வாடியின் மூலம் ஆடிப்பாடி விளையாடு பாப்பா என்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் குழந்தைகளுக்கு பயனுள்ள செயல்முறை கல்வி கற்றுத்தரப்படுகிறது. தற்போது மழையின் அளவு சராசரி அளவைவிட குறைந்துள்ளதால் குறுகிய கால பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதுடன் சொட்டுநீர் பாசனத்தை 100 சதவீதம் மானியத்துடன் பயன்படுத்த முன்வர வேண்டும். ஆடு, மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கோமாரி நோய் தடுப்பூசி போடுவதுடன் குடற்புழு நீக்கமும் செய்து கொள்ள வேண்டும்.

 

குழந்தை தொழிலாளி

 

சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு மேல்தான் திருமணம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அப்பெண் மனதளவிலும், உடலளவிலும் முழுமை பெறுகிறாள். மேலும், குழந்தை தொழிலாளர் முறையை அறவே ஒழித்து அவர்களுக்கு தேடித்தேடி கல்வியை அளிக்க வேண்டும். குழந்தைத்தொழிலாளர் மூலம் வரும் வருமானம் நமக்கு அவமானம் என ஒவ்வொருவரும் கருத வேண்டும். குழந்தை தொழிலாளர் முறை, குழந்தை திருமணத்தை தடை செய்தல் உள்ளிட்ட சமுதாய பொறுப்பு மீறல்களை பொதுமக்கள் தட்டி கேட்க வேண்டும். சமுதாய கடமையாற்ற முன்வர வேண்டும். கல்வி ஒன்றே நமக்கு அழியாத செல்வம். அப்படிப்பட்ட கல்வியை நமது அரசு பள்ளி திறந்த முதல்நாளே விலையில்லா பாடநூல், விலையில்லா சீருடை உள்ளிட்ட 14 வகையான உதவிகளுடன் விலையில்லாமல் கல்வி வழங்கி வருகின்றது என மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, வேளாண் இணை இயக்குநர் அல்தாப், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநர் மரு.நளினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் வட்டாட்சியர் முருகேசன், தனி வட்டாட்சியர் திருவாசகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்