முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூதாட்டியைக் கொன்று நகைப் பறிப்பு கர்நாடக இளைஞருக்கு ஆயுள் சிறை

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      ஈரோடு

மூதாட்டியைக் கொலை செய்து நகையைப் பறித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட கர்நாடக இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு அருகே உள்ள ஈ.பி.பி. நகரைச் சேர்ந்தவர் நாச்சாரம்மாள் (70). இவர் தனது மகன், மருமகளுடன் தனது வீட்டின் மேல்மாடியில் வசித்து வந்தார். இவரது வீட்டின் தரைதளத்தில் கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டம், பத்ராவதி தாலுகா, கிரியூர் பொம்மன்கட்டேவைச் சேர்ந்த காசையா என்பவரின் மகன் சீனிவாசன் (26) வசித்து வந்தார்.

திருமணமான இவர் தையல் கலைஞராகப் பணியாற்றி வந்தார். சீனிவாசன் தன் திருமணம், தங்கையின் திருமணத்துக்காக நாச்சாரம்மாளிடம் கடன் வாங்கி இருந்தாராம். ஒரு லட்சம் ரூபாய் சீட்டிலும் சேர்ந்து இருந்தார்.

போலீஸார் விசாரணை

அவரால் சரிவர கடன் தொகை, சீட்டு பணத்தை கட்ட முடியவில்லையாம்.இந்நிலையில், தனது வீட்டுக்கு நாச்சாராம்மாள் வந்தபோது அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்த சீனிவாசன், அவரது உடலை   தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டுவிட்டார். மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு அவர் தப்பினார். இச்சம்பவம் 27.8.2011-இல் நடைபெற்றது.இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி, சீனிவாசனைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை, நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு கொலை குற்றச்சாட்டுக்காக ஆயுள் சிறைத் தண்டனை, ரூ. 1,000 அபராதமும், நகையைக் கொள்ளை அடித்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 1,000 அபராதமும் விதித்து, தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்