முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆலயங்களில் மகாகும்பாபிஷேக விழா

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு புகழ் பெற்ற ஆலயங்களில் நேற்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 
கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கோபாலகிருஷ்ணன் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விசேஷ திருவாராதனம், அக்னிப் சணயம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றதை தொடர்ந்து புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டது. இதில் முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர்கோயில்

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர்கோவிலில் 85 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 29ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கப்பட்ட யாகசாலை பூஜையில் 85 சிவாச்சாரியார்கள், 20 வேதவிற்பன்னர்கள், மற்றும் ஓதுவார்கள் தினந்தோறும் நான்கு வேதங்களையும், பன்னிரு திருமுறைகளை பாடி யாகபூஜை செய்தனர். பூஜை செய்யப்பட்ட கங்கை புனிதநீரை கருவறைக்கு மேலே உள்ள கோபுர விமானத்திற்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மஹாகும்பாபிஷேகத்தை கண்டு ரசித்தனர்.

ஸ்ரீலிவனேஸ்வரர் திருக்கோவில்

திருச்சி மாவட்டம் திருப்பைஞ்சுலி கிராமத்தில் உள்ள விசாலாட்சி உடனுறை ஸ்ரீலிவனேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது. முன்னதாக யாகசாலையிலிருந்து தீர்த்தக்குடங்கள் மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் சுமந்துவரப்பட்டு, பின்னர் வேதமந்திரங்கள் முழங்கிட கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள பழைமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 1959ம் ஆண்டு நடைபெற்ற மாசி மக திருவிழாவின் தேரோட்டத்தில் தேரின் அச்சு முறிந்தது. இதையடுத்து, பக்தர்களின் வேண்டுகோள்படி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தேர் செய்யப்படும் என அறிவித்திருந்தார். புதிய தேர் செய்யும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, நேற்று புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேரை வடம்பிடித்து இழுத்து, வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு வேதாரண்யம் தாலுகாவிற்கு நேற்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அருணாச்சலேஸ்வரர் கோயிலில்  6 ம்தேதி கும்பாபிஷேகம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்னர், வரும் 6ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருக்கோயிலில் உள்ள 32 பரிவார மூர்த்திகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நான்காம் கால யாகம் நடத்தி, சொர்ணபந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்