முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்பரிவார மூர்த்திகளுக்கு நேற்று கும்பாபிஷேகம்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் பிரகாரங்களில் அமைந்துள்ள பரிவார மூர்த்திகளுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகாகும்பாபிஷேகம் வரும் 6ந் தேதி நடைபெறவுள்ளது. துர்க்கையம்மன் உற்சவத்துடன் கடந்த மாதம் 26ந் தேதி தொடங்கிய விழா தொடர்ந்து வெகுவிமர்சையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான யாகசாலை பூஜைகள்  செவ்வாயன்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. 2வது நாளான புதனன்று 2ம் கால யாக சாலை பூஜை நடந்தது. அன்றுமாலை 5 மணியளவில் 3ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. யாகசாலை பூஜையில் 16 ஓதுவார்கள், 125 விற்பன்னர்கள், 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். மேலும் 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதபாராயணத்தில் ஈடுபட்டனர். 108 யாக குண்டங்களில் அக்னி வார்க்கப்பட்டு வாசனை திரவியங்கள், மூலிகை நறுமண பொருட்கள், தூய நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு யாகபூஜை நடந்தது. மேலும் பரிவாரங்கள் சகிதமாக யாக சாலை கும்பத்தில் எழுந்தருளிய அண்ணாமலையாருக்கும் உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அப்போது அங்கு யாகசாலை மண்டபத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் மகாகும்பாபிஷேகத்தின் முக்கிய விழாவான பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று (வியாழக்கிழமை) காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் நடந்தது. அதையட்டி நேற்று அதிகாலை முதல் யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பரவார மூர்த்திகளின் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகத்திற்காக யாகசாலையில் வைத்திருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் காலை 9 மணியளவில் வேதமந்திரங்கள் முழங்க அந்தந்த சன்னதிகளுக்கு  கொண்டு சென்றனர். பின்னர் கோபுர கலசங்கள்மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலையம்மனுக்கு அரோகரா என பக்திமுழக்கமிட்டனர். அப்போது திருப்பணி உபயதாரர்களை மட்டுமே கோபுரங்கள் உள்ளே பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முன்னதாக கம்பத்திளையனார் சன்னதி, கோபுரத்திளையனார் சன்னதி, பாதாள லிங்கம், சம்பந்த விநாயகர் சன்னதி உள்ளிட்ட பரிவார மூர்த்தி சன்னதிகள் அனைத்தும் அலங்கப்பட்டுள்ளன. யாகசாலையின் 3ம் நாளான நேற்று காலை 4ம் கால யாக பூஜை நடந்தது. மாலையில் 5ம் கால யாகபூஜையும் நடைபெற்றது. யாகசாலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனம், மருத்துவ குழுவினருடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் யாகசாலை அருகே தயார்நிலையில் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் மகா கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த பணிகளை நேற்று  மாலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்