முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீட்பு கலெக்டர் பிரபாகர் நடவடிக்கை

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      ஈரோடு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தேவநல்லூரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). இவருடைய மகன் நடராஜ் (35). நடராஜின் மனைவி மகேஸ்வரி (32), இவர்களுடைய மகள் சத்யா (15), மகன்கள் நரேஷ்குமார் (12), அபிஷ்குமார் (8)இவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மஞ்சாளநாயக்கனூருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை வளாகத்தில் தங்கினர். இதில் பெருமாள், நடராஜ், மகேஸ்வரி, சத்யா ஆகியோர் அந்த செங்கல் சூளையில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். தவுட்டுப்பாளையத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் நரேஷ்குமார் 7–ம் வகுப்பும், சின்னத்தம்பிபாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் அபிஷ்குமார் 3–ம் வகுப்பும் படித்தனர்.

கலெக்டரிடம் புகார்

ஒரு நாளைக்கு 1000 செங்கல்கள் உற்பத்தி செய்தால் ரூ.600 என்ற சம்பளத்தின் அடிப்படையில் பெருமாளின் குடும்பத்தினர் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் குடும்பமாக வேலை செய்ததால் ஒரு நாளைக்கு 1,500 செங்கல்கள் உற்பத்தி செய்து வந்தனர். இதற்காக தினமும் அவர்களுக்கு ரூ.900 கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ரூ.450 மட்டும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சொந்த ஊர், கோவில் திருவிழா, உறவினர் வீட்டு திருமண விழா போன்ற விழாக்களுக்கு செல்ல முடியாதபடி அந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்ததாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து நடராஜ் அங்கிருந்து தப்பி வந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் புகார் மனு அளித்தார்.

6 பேர்மீட்பு

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரபாகர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோபி சப்–கலெக்டர் கிருஷ்ணன் உண்ணிக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சப்–கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி, அந்தியூர் தாசில்தார் (பொறுப்பு) கிருஷ்ணவேணி, மண்டல துணை தாசில்தார் சக்திவேல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்று மஞ்சாளநாயக்கனூரில் உள்ள குறிப்பிட்ட செங்கல் சூளைக்கு சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில், ‘பெருமாள், நடராஜ், மகேஸ்வரி, சத்யா ஆகியோர் ராமசாமியின் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் அதிகாரிகள் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 4 பேர் மற்றும் நடராஜின் மகன்கள் 2 பேர் என 6 பேரையும் அதிகாரிகள் பாதுகாப்பாக தேவநல்லூருக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தியூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்