முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் இரவுபகலாக சீமைகருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 மண்டபம்,-  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஐகோர்ட்டு உத்தரவின்படி இரவு பகலாக சீமைகருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

     சீமைகருவேல மரங்கள்

ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதுதவிர, மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அடியோடு அகற்றி அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள காட்டு கருவேல மரங்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.குறிப்பாக மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாலமுருகன் மேற்பார்வையில் பேரூராட்சி செயல்அலுவலர் மஞ்சுநாத் உள்ளிட்ட அலுவலர்கள் பேரூராட்சி பகுதிகளில் இரவு பகலாக சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

          மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அரசு புறம்போக்கு நிலங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் இரவு பகலாக அகற்றப்பட்டு வருகின்றன. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்ஆதாரங்களை பாழ்படுத்தும் கருவேல மரங்கள் செயல் அலுவலர் மஞ்சுநாத் மேற்பார்வையில் அகற்றப்பட்டு வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அரசு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களலும், ரெயில்வே துறைக்கு சொந்தமான நிலங்கள், மீனவளத்துறைக்கு சொந்தமான நிலங்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலங்கள் என அனைத்து அரசு நிலங்களிலும் வளர்ந்துள்ள கருவேல மரங்களை முழுமையாக அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கண்மாய்கள், ஊருணிகள், நீர்நிலைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள்  முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன.

       எச்சரிக்கை

     இதுதவிர, மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள தனியார் இடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அந்தந்த நிலங்களின் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து 2 தினங்களுக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக அந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு அதற்கான தொகையை 2 மடங்களாக சம்பந்தப்பட்ட இடங்களின் உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும் என்று மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத் கடுமையாக எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பகுதிகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கை அறிவிப்பும் ஆட்டோக்களில் செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த உத்தரவினை மீறி கருவேல மரங்களை அகற்றாதவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல்அலுவலர் மஞ்சுநாத் எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்