முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி.

 

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சாரல் அரங்கில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து சீமை கருவேல மரங்களை ஒருங்கிணைந்து அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது-

 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிப் பகுதி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியினை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இப்பணிகளை 07.02.2017க்குள் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி முடிவடைய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் தீர்ப்பின்படி, மாநகராட்சி பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்றிய விவரங்களை ஆய்வு செய்ய 5 வழக்கறிஞர்கள் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை (03.02.2017) வழக்கறிஞர்கள் ஆணைய உறுப்பினர்கள் சீனிவாசகராகவன், கார்த்திக், அசோக், பிணாய்ஆகாஷ், நவநீதராஜா திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் சீமை கருவேலங்கள் அகற்றும் பணியினை ஆய்வு செய்கிறார்கள். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கால்வாய், குளம், ஏரி, குட்டை ஆகிய பகுதிகளில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மேலும் தீவிரப்படுத்தி, 07.02.2017 அன்றுக்குள் அனைத்துப் பகுதிகளிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிட வேண்டும். மாவட்ட அளவில், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், மாநகராட்சி ஆணையாளர் தங்களது பகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளி, ஊராட்சி ஒன்றியப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளிடம் சீமை கருவேல மரங்களினால் ஏற்படும் பாதிப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தனியார் காலி வீட்டுமனைகள், தனியார் பட்டா நிலங்களில் காணப்படும் சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில், வட்டாட்சியர் துணையுடன் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அகற்றி, சம்மந்தப்பட்ட தனியாரிடம் இருமடங்கு வசூலிக்கப்படும் என்ற விபரத்தினை, விளம்பர பதாகைகள் மூலம் சம்மந்தப்பட்ட பகுதிகளில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.

 

வட்டாட்சியர்கள் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அகற்றி, அதன் விவரத்தினை கலெக்டர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்களுக்கு சீமை கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை விநியோகித்து, மாணவ, மாணவியர்களை கொண்டு, விழிப்புணர்வு பேரணியினை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சியின் சார்பாக சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தண்டோர மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்தி, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கலெக்டர் மு.கருணாகரன்,இ.ஆ.ப., தெரிவித்தார்கள்.

 

அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.க.குழந்தைவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொ) கீர்த்தி பிரியதர்ஷிணி, (வளர்ச்சி) தண்டபாணி உள்பட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பள்ளிக் கல்வி, வருவாய் துறை உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்