முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் மானிய விலையில் வைக்கோல் வினியோகம் செய்ய விலைப்புள்ளி வரவேற்கப்படுகிறது : கலெக்டர் க.நந்தகுமார் தகவல்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.நந்தகோபால் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயத்திற்கு நீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. மேய்ச்சலுக்கு புல் இல்லாததாலும், சோளம் மற்றும் மக்காச்சோளம் சரியாக விளையாததாலும், வீரிய கால்நடை தீவன உற்பத்தி பரப்பளவு குறைந்த காரணத்தாலும் கால்நடை தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் இடுபொருட்கள் விலை அதிகமானபடியால், மாடுகளை வைத்திருக்கும் விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் அவர்களால் உலர் வைக்கோல் தீவனத்தை மானிய விலையில் வழங்க ரூ.90.00 லட்சம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மானிய விலை

 

இத்திட்டத்தின்படி ஒரு கிலோ வைக்கோல் ரூ.2 என்ற மான்ய விலையில் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வீதம் அதிகபட்சம் 5 மாடுகளுக்கு வாராந்திர தேவையின் அடிப்படையில் வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கால்நடை வளர்ப்போர் தங்களது ரேசன் கார்டு நகல், கால்நடை வளர்ப்போர் பாஸ்போர்ட் அளவு போட்டோ இரண்டு நகல் மற்றும் கால்நடைகளின் இருப்பு விபரம் ஆகியவற்றை அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகங்களில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு விரைவில் "கால்நடை தீவனம் வழங்கும் அட்டை" வழங்கப்படும். அட்டை வைத்திருந்தால் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.

தீவன கிடங்கிற்கு உலர்ந்த வைக்கோல் வாங்கி, 10 கிலோ கட்டுகளாக கட்டி, வண்டியில் ஏற்றி சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தக வளாகத்தில் இறக்கி, அடுக்கி போர் போட்டு 2 மாதங்களுக்கு வழங்கிட விருப்பம் உள்ள விவசாயிகள் ஒரு கிலோ வைக்கோல் விலையை குறிப்பிட்டு மூடி முத்திரையிடப்பட்ட போட்டி விலைப்புள்ளியினை (கொட்டேசன்) கொடுக்கலாம். இத்திட்டத்திற்கு வழங்கப்படும்; வைக்கோல் ஈரமில்லாததாகவும் , உலர்ந்ததாகவும் இருக்க வேண்டும். பூசனம் பிடித்து மக்கிப் போனதாக இருக்கக் கூடாது. தரம் இல்லாத வைக்கோல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வழங்கல் ஆணை பெற்ற விவசாயிகள் 10 நாட்களுக்குள் விநியோகத்தை துவங்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வைக்கோல் விநியோகம் செய்ய விரும்பும் விவசாயிகள் 13.02.2017 ம் தேதி பிற்பகல் 05.00 மணிவரை மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளியினை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை மருந்தக வளாகம், "வைக்கோல் விலைப்புள்ளி" பெட்டியிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ மேற்கண்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு பெறப்படும் மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் 14.02.2017 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட வைக்கோல் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் போட்டி விலை புள்ளியனை அனுப்பியவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் திறக்கப்பட்டு குறைந்த போட்டி விலை புள்ளி கோரியவர்களுக்கு வழங்கல் ஆணை வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை 04328 – 225166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக்கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்