முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்றாவிட்டால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை எச்சரிக்கை

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்

சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், சாலைகள், ரயில்வே தடம், தனியார் இடங்கள், வீட்டுமனை நிலங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சீமை கருவேல மரங்கள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் அகற்றிட மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

கருவேலமரங்கள்

 

இப்பணிகளை செய்து முடிக்க அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சரக வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 11,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 589 கிராம ஊராட்சிகளிலும், சீமை கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக தீவிர பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், பள்ளிக் கல்வி துறையின் மூலம் அனைத்து வட்டங்களிலும் உள்ள பள்ளிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படவுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம், தனியார் பல்கலைக் கழகங்கள், நாட்டு நலப்பணி திட்ட கல்லூரி மாணவர்கள் பங்களிப்புடன் சீமை கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக பொது மக்களிடையே தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் 31.01.2017 மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி அனைத்து வட்டங்களிலும், வட்டார ஊரக பகுதிகளிலும் சீமை கருவேல மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் இடங்களை நீதிபதிகள், அந்தந்த பகுதிகளில்; பார்வையிட்டு வருகின்றனர். சீமை கருவேல மரம் அகற்றுவது தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட 5 வழக்கறிஞர் ஆணையர்களும், அரசுத்துறை அலுவலர்களும் மாவட்ட முழுவதும் சீமை கருவேல மரம் அகற்றும் பணியை பார்வையிட்டும், கண்காணித்தும் வருகின்றனர்.

சீமை கருவேல மரங்கள் உள்ள இடங்களில் 40 அடி ஆழம் வரை பூமிக்கடியில் வேர் சென்று பூமியில் உள்ள நீரை உறிஞ்சிவிடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. சீமை கருவேல மரங்கள் வளரும் இடங்களில் மற்ற மரங்கள் வளரவிடாமல் தடுக்கப்படுகிறது. நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாக்க சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்