முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினாவில் நடந்த பீகார் வாலிபர் கொலையில் டெய்லர் கைது

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      சென்னை

மெரினாவில் நடந்த பீகார் வாலிபர் கொலையில் டெய்லர் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.
மெரினா கடற்கரையில் பீகாரை சேர்ந்த நூர் உசேன் அன்சாரி என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நடந்த இக்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.அவரது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், போலீஸ்காரர்கள் பார்த்தசாரதி, சாமுவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கொலையாளி யார்? என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தினர்.அப்போது ராயப்பேட்டையை சேர்ந்த முன்வர் ஷெரீப் (25) என்ற வாலிபர், நூர்உசேன் அன்சாரியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஷெரீப்பை போலீசார் கைது செய்தனர்.கொலையுண்ட நூர் உசேனும், ஷெரீப்பும் நுங்கம்பாக்கத்தில் டெய்லர் கடை ஒன்றில் வேலை செய்து வந்தனர். நூர்உசேனுக்கு டெய்லர் வேலையை ஷெரீப் கற்றுக் கொடுத்துள்ளார். இதனால் 2 பேரும் நண்பர்களாகவே இருந்தனர். ஆனால் நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இந்த நேரத்தில் ஷெரீப் டெய்லர் வேலையை இழந்தார். இதனால் அவருக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. தான் வேலை இழப்பதற்கு நூர்உசேன்தான் காரணம் என்று கருதிய ஷெரீப், அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.இதனை தொடர்ந்து ஷெரீப், நூர்உசேனிடம் பகை உணர்வை மறந்து பழகுவது போல நடித்துள்ளார். அப்போது மெரினா கடற்கரைக்கு போய் பிரியாணி சாப்பிடலாம் என்று ஷெரீப் அழைத்துள்ளார். இதனை நம்பி நூர்உசேன் சென்றார்.ஐஸ்அவுசில் இருந்து தனது மோட்டார் சைக்கிளிலேயே ஷெரீப், நூர்உசேனை கூட்டிச் சென்றார். கடற்கரையில் இருள் சூழ்ந்த பகுதியில் அமர்ந்து 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர்.வேலை பறிபோன ஆத்திரத்தில் இருந்த ஷெரீப் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நூர் உசேனை சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.நூர்உசேன், கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது அண்ணனிடம் ஷெரீப் பற்றி கூறியுள்ளார். அப்போது ஷெரீப் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார். போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்தது.இதன் பின்னரே, போலீசார் ஷெரீபை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நூர்உசேனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இன்று ஷெரீப்பை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்