முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணை சோதனையை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஏவுகணை சோதனையை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏவுகணை சோதனை

ஈரான் நாடு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் படைத்த ஏவுகணைகளை சோதித்துப் பார்ப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. இருப்பினும், ஈரான் கடந்த 29-ந் தேதி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குகிற நடுத்தர ஏவுகணை ஒன்றை சோதித்து பார்த்தது. இது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.

பொருளாதார தடை

இதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த டிரம்ப், “ ஈரான் நெருப்புடன் விளையாடிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஒபாமா எவ்வளவு அன்பானவராக விளங்கினார் என்பதை அவர்கள் பாராட்டவில்லை. ஆனால் நான் அப்படி அல்ல” என கூறினார். இந்த நிலையில் ஈரான் நாட்டை சேர்ந்த 13 தனிநபர்களுக்கும், 12 கம்பெனிகளுக்கும் அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடை விதித்து கடந்த 3 நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.

அச்சுறுத்தும் ஈரான்

இது தொடர்பாக அமெரிக்க நிதித்துறையின் பொருளாதார தடை பிரிவின் தலைவர் ஜான் ஸ்மித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருவதும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குகிற ஏவுகணைகளை தயாரித்து வருவதும் பிராந்தியத்துக்கும், உலகளாவிய நமது கூட்டாளிகளுக்கும் மட்டுமல்லாது அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

சகித்துக்கொள்ளாது

ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மிக்கேல் பிளின் கருத்து தெரிவிக்கையில், “ஈரானின் ஆத்திரமூட்டும் செயல்களை இனியும் அமெரிக்கா சகித்துக்கொள்ளாது. அவர்களது அச்சுறுத்தல் நமது தேச நலனுக்கு எதிரானது. அமெரிக்கா மற்றும் உலக அரங்கின் மீதான ஈரானின் விரோதமான, வெறித்தனமான செயல்களை அமெரிக்கா கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. அந்த நாட்கள் முடிந்துவிட்டன” என குறிப்பிட்டார்.

ஈரான் கண்டனம்

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. “இது சட்டவிரோதமானது. பிராந்திய பயங்கரவாத குழுக்களுக்கு உதவிகள் செய்து வருகிற அமெரிக்க நபர்கள், நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறி உள்ளது. மேலும் அமெரிக்காவின் பொருளாதார தடையைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்று கூறுகிற விதத்தில், ஈரானில் நேற்று முன்தினம் நடைபெற்ற போர் பயிற்சி முகாமின்போது ரேடார்கள், ஏவுகணைகள் சோதித்துப்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்