முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘விசா’ ரத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை: அதிபர் டிரம்ப் தரப்பு மேல் முறையீடு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : 7 நாடுகள் ‘விசா’ ரத்து என்ற உத்தரவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்ததற்கு எதிராக டொனால்டு டிரம்ப் தரப்பில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்ப்பு - போராட்டம்

அமெரிக்க அதிபராக பதவியேற்று உள்ள டொனால்டு டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் பல்வேறு தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  உலகின் எந்தவொரு நாட்டில் இருந்தும் வரும் அகதிகள், அமெரிக்காவில் நுழைவதற்கு 4 மாதம் தடை. சிரியா அகதிகள், குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்கிற வரையில், அதாவது மறு உத்தரவு பிறப்பிக்கிற வரையில் அமெரிக்காவினுள் நுழைய முடியாது. ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடு-களை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தம் என்ற டிரம்பின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.  இதற்கு எதிராக அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதிபர் உத்தரவுக்கு தடை

இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்குகள் தாக்கலாகி வருகின்றன. அப்படி சியாட்டில் மத்திய கோர்ட்டில் தாக்கலான வழக்கை நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் விசாரித்து, டிரம்ப் உத்தரவுக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதித்தார். இதை டிரம்ப் நிராகரித்தார்.

கேலிக்கூத்தானது

இது தொடர்பாக டிரம்ப் கடுமையாக சாடி ட்விட்டரில் நேற்று முன்தினம் இரண்டு கருத்துகள் வெளியிட்டார். அதில் ஒன்றில், “பாதுகாப்பு காரணங்களையொட்டி, யார் நாட்டுக்குள் வருவது, வெளியே செல்வது என சொல்ல முடியாத நிலை வந்துவிட்டால், அது பெரும் சிக்கலானது” என கூறி உள்ளார். மற்றொன்றில், “அந்த பெயரளவு நீதிபதியின் கருத்து, கேலிக்கூத்தானது. அது முறியடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேல்-முறையீடு

சியாட்டில் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் மேல்-முறையீடு செய்து, தற்காலிக தடையை விலக்கி கொள்ள முடியும் என்ற நிலையானது இருந்தது. முதலில் சியாட்டில் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக கூடிய விரைவில் மேல்-முறையீடு செய்யப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்தது. ஆனால் சியாட்டில் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக உடனடியாக தடை கேட்டு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. இதன்காரணமாக 7 நாடுகள் மீதான விசா தடை விவகாரத்தில் குழப்பம் நிலவுகிறது.

ஏர்வேஸ் அறிவிப்பு

இதற்கிடையே டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட்டு தற்காலிக தடை விதித்திருப்பதால், எமிரேட்ஸ், எதிஹாட் ஏர்வேஸ், கத்தார் ஏர்வேஸ் நிறுவனங்கள், அமெரிக்கா செல்லும் தங்கள் விமானங்களில் டிரம்பால் தடை செய்யப்பட்ட 7 நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளன.

டிரம்புக்கு பின்னடைவு

டிரம்பின் ‘விசா’ தடை உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. டிரம்பின் அரசு அதிகாரத்துக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதற்கிடையே, மத்திய கோர்ட்டின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசின் நீதித்துறை மேல்கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. மேலும் அதிபர் டொனால்டு டிரம்ப், உள்துறை அமைச்சர் ஜான் கெல்லி, வெளியுறவு துறை அமைச்சர் ரெஸ்டில்லர்சன் ஆகியோரும் சீட்டில் மத்திய கோர்ட்டு தடை உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்புக்காகத்தான் ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசர வழக்காக விசாரித்து தடையை உடனே நீக்க வேண்டும். என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்