கடலூர் மாவட்டத்தில் மீசில்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி முகாம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2017      கடலூர்
Feb 06-b

கடலூர்.

 

கடலூர் மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெறும் 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தட்டம்மை-விளையாட்டம்மை (மீசில்ஸ்-ரூபெல்லா) தடுப்பூசி முகாமினை கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் வேணுகோபாலபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

 

இந்த தட்டம்மை-விளையாட்டம்மை தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

 

தட்டம்மை-விளையாட்டம்மை (மீசில்ஸ்-ரூபெல்லா) தடுப்பூசி முகாம் கடலூர் மாவட்டத்தில் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இம்முகாம் வரும் பிப்ரவரி-28-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மாவட்டத்திலுள்ள 6,20,062 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது. 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது. இப்பணியில் 12,610 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 384 தடுப்பூசி பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு மூலம் இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது. நமது மாவட்டத்தில் 2158 பள்ளிகளில் உள்ள 4.41 இலட்சம் மாணவ மாணவியர்களுக்கும், 2023 அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது. இதுபோக மாவட்டத்தில் இடம் பெயர்தல் மூலம் உள்ள குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது.

 

இந்த தடுப்பூசி மூன்று பகுதிகளாக குழந்தைகளுக்கு போடப்படவுள்ளது. முதல் பகுதியில் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கும், இரண்டாம் பகுதியில் அங்கன்வாடி மையத்திலுள்ள குழந்தைகளுக்கும், மூன்றாம் பகுதியில் விடுப்பட்ட குழந்தைகளுக்கும் போடப்படவுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு தட்டம்மை-விளையாட்டம்மை தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள். இந்த தடுப்பூசியை ஒரு முறை போட்டுவிட்டால் தட்டம்மை-விளையாட்டம்மை நோய்கள் வருவதை முற்றிலுமாக தவிர்த்துவிடலாம். ஏற்கனவே, இந்த தடுப்பூசி போட்டிருந்தாலும் தற்பொழுது நடைபெறும் முகாமிலும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். இந்த தடுப்பூசி மிகவும் தரமானது, பாதுகாப்பானது. இத்தடுப்பூசி குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை. இத்தடுப்பூசி குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, நமது மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த தட்டம்மை-விiளாயட்டம்மை தடுப்பூசியை தவறாமல் தங்கள் குழந்தைகளுக்கு போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் மாதவி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கே.ஆர்.ஜவஹர்லால், கடலூர் நகராட்சி ஆணையர் செ.விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளி தலைமையாசிரியர் லியோநாட் ஜானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: