முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு, 1607 மாடுபிடி வீரர்கள் பதிவு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர், - மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் நாளை (வியாழக்கிழமை)காலையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதையட்டி வாடிவாசல் அலங்கரிப்பு, பார்வையாளர் மேடையமைப்பு, இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடந்துள்ளது. மேலும் நேற்று காலையில் இருந்து மதியம் வரை மாடுபிடி வீரர்களுக்கான பதிவு நடந்தது. இதில் 1670 வீரர்கள் பதிவு செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 1607 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு குறைபாடு காரணமாக 67 நபர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 850 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஜல்லிக்கட்டு வாடிவாசல் மைதான பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலமேடு பகுதியில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்ட போலிசார் சாதாரண உடையில் கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு 10ம் தேதி நடக்கிறது.

அலங்காநல்லூரில் 10ம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதையட்டி பார்வையாளர் அமரும் காலரி, இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பணிகள் துரிதமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தண்டோரா போட்டு ஊர்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் இருந்து மதியம் வரை கிராம மக்கள்  பங்கேற்ற கூட்டம் அங்குள்ள மந்தை திடலில் நடந்தது. இதில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக அரசியல் கட்சிகள் சார்பில்லாத கிராம பொது விழா கமிட்டியை நியமிக்க வேண்டும், பொதுவான ஜல்லிக்கட்டு விழாவாக நடத்தவேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் அலங்காநல்லூர், வலசை, குறவன்குளம், ஒத்தவீடு ஆகிய கிராம மக்கள் கலந்துகொண்டனர். மனுவை வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமாரி, சமயநல்லூர் டிஎஸ்பி வனிதா, வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் ஆகியோரிடம் கொடுத்தனர்.

இதைதொடர்ந்து விழா கமிட்டி நிர்வாகிகள் சுந்தர்ராஜன், சுந்தர்ராகவன் உள்ளிட்டவர்களிடம் இதைபோல் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கு அரசு விதிமுறைப்படி நடத்துவோம். விழாகமிட்டியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சி தலைவரின் வேண்டுகோளின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் விழா கமிட்டியினர் மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே கேட்டுகொண்டபடி வரும் 10ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை அரசு வழிகாட்டுதல்படி செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சி தலைவரை சந்திக்க விழா கமிட்டியினரும், கிராம கமிட்டியினரும் மதுரை சென்றனர். அலங்காநல்லூரிலும் ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு விழாவை காணவரும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அரசு விதிமுறைப்படி தகுந்த பாதுகாப்பும் முறையான வரவேற்பும் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்