முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் இலவச வீடுகள்பெற விண்ணப்பிக்க பெண்கள் குவிந்தனர் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் வழங்கப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      ஈரோடு

நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகளை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க என்று தனியாக இணைய பக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பக்கத்தில் மத்திய அரசின் பொதுச்சேவை மையங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை பதிவேற்ற முடியும்.எனவே மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொதுச்சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் எதிரே ராஜாக்காடு முதல் வீதியில் உள்ள கேரள சமாஜம் கட்டிடத்தில் இயங்கி வரும் பொதுச்சேவை மையத்தில் நேற்று வீடு கேட்டு விண்ணப்பிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குவிந்தனர். காலை 8.30 மணி முதல் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பின் தேதியிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

டோக்கன்கள்

வரிசையாக நின்ற ஆண்களும், பெண்களும், தங்கள் பெயரைக்கூறி டோக்கன்கள் பெற்றுக்கொண்டனர். அந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டு உள்ள தேதியில்  பொதுச்சேவை மையத்துக்கு நேரில் வந்து தங்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொள்ளலாம் என்று பொதுச்சேவை மைய பணியாளர்கள் தெரிவித்தனர்.இதுபற்றி பொதுச்சேவை மைய நிர்வாகி மணமோகன் கூறியதாவது–மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொதுச்சேவை மையங்கள் ஈரோடு மாவட்டத்தில் 83 இடங்களில் இயங்கி வருகின்றன. இந்த மையம் மூலமாக மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை திருத்தங்களையும் இந்த மையங்கள் மூலம் செய்யலாம். தற்போது சொந்த வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதள பக்கத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாங்கள் பதிவு செய்து வருகிறோம்.

ஆதார் அட்டை எண்

இந்த திட்டத்தில் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் விண்ணப்பிக்கலாம்.குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை எண், வாக்காளர் அடையாள அட்டை எண், குடும்பத்தில் ஒருவரின் வங்கி கணக்கு புத்தக எண் ஆகியவற்றை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இதுபோல் விரல் ரேகை மற்றும் செல்போன் எண்ணையும் இணைக்க வேண்டும்.எங்கள் சேவை மையம் மூலம் தினசரி 50 பேருக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். கடந்த வாரத்தில் 400 பேருக்கு பதிவு செய்து இருக்கிறோம். இந்த தகவல் தெரிந்து கட்டுக்கடங்காத கூட்டம் வந்து விட்டது. எனவே பொதுமக்களை காக்க வைக்காமல் குறிப்பிட்ட தேதியில் வந்து பதிவு செய்து கொள்ளும் வகையில் டோக்கன்கள் வழங்கினோம். ஒரே நாளில் 1,800 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன. டோக்கன்கள் வழங்கப்பட்டவர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஏப்ரல் 5–ந் தேதிவரை ஆகும். எனவே இனிமேல் ஏப்ரல் 1–ந் தேதிக்கு பின்னர்தான் அடுத்த பதிவுக்கான டோக்கன் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்