முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மக்களவையில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகள் அமளி
பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல்நாளில் குடியரசு தலைவர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, இ.அகமது எம்.பி.க்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி.க்கள், பாராளுமன்றத்தில் தொடர்ந்து முழக்கமிட்டனர். குறிப்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இப்பிரச்சனையை எழுப்பியதால் அவையை சுமுகமாக நடத்த முடியவில்லை. கடந்த மாதம் 31-ம் தேதி பாராளுமன்றம் கூடியதில் இருந்து இதே நிலை நீடித்தது.

நேற்றும் அமளி
மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடியும் வரையில் எந்த இடையூறும் இல்லை. கேள்வி நேரம் முடிந்ததும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து, இ.அகமது எம்.பி. மரணம் தொடர்பான பிரச்சினையை கிளப்பி, அதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினார். அவருக்கு ஆதரவாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் குரல் எழுப்பினார்கள்.

தீர்மானம் நிறைவேற்றம்
ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்குமாறு சுற்றுலா மற்றும் கலாசார துறை மந்திரி மகேஷ் சர்மாவுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் சபைக்குள் வந்தனர். அதன்பிற்கு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்