முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருவைக் கலைப்பதற்கு அனுமதி : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படக்கூடும் என்பதால், அவரது வயிற்றில் வளரும் 6 மாத கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. டெல்லியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது வயிற்றில் வளரும் சிசுவுக்கு சிறுநீரகம் இல்லை என்பது 21-வது வாரத்தில் நடந்த பரிசோதனையில் தெரியவந்தது. அத்துடன் வேறு சில குறைபாடுகளும் இருப்பதால் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபற்றி ஆராய பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை கடந்த 5-ம் தேதி அமைத்தது. இந்நிலையில், கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சிறுநீரகம் இல்லாததுடன் நுரையீரல் சுருங்கி இருப்பதாகவும் நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கருவை வளர விட்டால் கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர் குழுவின் அறிக்கையையும் இதற்கு முன்பு இது தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் பரசீலித்த நீதிபதிகள், கருவைக் கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். இதுபோன்ற மற்றொரு வழக்கில் மும்பையைச் சேர்ந்த கர்ப்பிணியின் வயிற்றில் வளர்ந்த 6 மாத கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 16-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்