தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருநாள்:முருகன் கோவில்களில் கோலாகல விழா

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      ஆன்மிகம்
tcr3

திருச்செந்தூர்  - தைப்பூசத் திருவிழாவைமுன்னிட்டு, பழனி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்தும், பாத யாத்திரையாகவும் வந்தனர்.

இரண்டாம் படை வீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டதுடன், முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர், அஷ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடைபெற்றது. தைப்பூச விழாவில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும், பால்குடம் சுமந்தும் பாதயாத்திரையாக வந்து கலந்துகொண்டனர். கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச ஜோதி
கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில் 146-வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


பழனியில் தைப்பூசம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத்தையொட்டி திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்தும், பாதயாத்திரையாகவும் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், நேற்று மாலை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியர் திருக்கோயிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விரதம் இருந்த பக்தர்கள், பால், மலர் காவடிகள் எடுத்து முருகப்பெருமானை வழிபட்டனர். பொன்னேரியை அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: