முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

                                  பாலாலயம்

ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் மாரியம்மனும், காளியம்மனும் ஓரேகருவறையில் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர் .இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆனதையொட்டி பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் கடந்த 04.09.2016 அன்று பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அன்று முதல் கோபுரம் மற்றும் கோவிலின் அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசும் பணி நடைபெற்று நேற்று மேள தாளங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

                                    மகா கும்பாபிஷேகம்

விழாவினையொட்டி கடந்த 29_ந் தேதி முகூர்த்தக்கால் நடும் பணி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் 7_ந் தேதி முதல் தொடங்கின. இதில் காவேரி, கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டு சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை மேற்கொண்டனர். காலை 8.30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்க பூஜைகளும், மாலை 4.35 மணி முதல் முதல் காலயாக வேள்வி பூஜையும், 8_ந் தேதி காலை 9.15 மணி முதல் இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலை 5 மணி முதல் மூன்றாம் கால வேள்வி பூஜையும், விழாவின் முக்கிய நாளான நேற்று (9_ந் தேதி) காலை 5.55 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜையும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய குடங்களை எடுத்துக்கொண்டு கோபுரங்கள் மீது ஏறி வேத மந்திரங்களை ஓதினர். காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பெரிய கோபுரம் மீது ஏறி பச்சைக் கொடியை அசைத்தார். அதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள ராஜபோபுரம், மூலவர் கோபுரம், மணிக்கூண்டு கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, மகாசக்தி, பராசக்தி  என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர். அதன்பின்னர் புனித நீரை சிவாச்சாரியார்கள் பக்தர்கள் மீது தெளித்தனர். தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து

10.30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து ஸ்ரீ மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம், குடமுழுக்கு தீபாராதனையும் நடைபெற்றது.

                          அன்னதானம்

கும்பாபிஷேக விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, திருக்கோயில் செயல் அலுவலர் லோகநாதன், ஆய்வாளர் தனசேகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவினையொட்டி மெயின்பஜார் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊட்டி நகரில் முக்கிய கோவிலான மாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகமும், மிகவும் பிரசித்தி பெற்ற எல்க்ஹில் முருகன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவும் ஒரே நாளில் வந்ததினால் இரண்டு கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஊட்டி நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாக்களையொட்டி மாவட்ட எஸ்.பிமுரளி ரம்பா உத்தரவின் பேரில் நகர துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்