முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலையில் நேற்று விடிய விடிய தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8.02 மணிக்கு தொடங்கி இன்று (சனிக்கிழமை) காலை 6.58 மணிக்கு நிறைவடைந்தது. அதையட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலையிலிருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலை 4 மணிக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. தை மாத கடும் குளிரையும், பனியையும் பொருட்டுபடுத்தாமல் இன்று விடிய விடிய 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதனால் கிரிவலப் பாதையின் 14 கி.மீ. தூரம் தொலைவும் பக்தர்களால் நிரம்பியிருந்தது. கிரிவலப் பாதையிலுள்ள அஷ்ட லிங்க சன்னதிகளை தரிசித்தபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் ஆன்மீக அமைப்புகள் மற்றும் சேஷாத்திரி ஆசிரமம், ரமணா ஆசிரமம், விசிறிசாமியார் ஆசிரமம், நித்யானந்தா ஆசிரமம், ஓம் நமச்சிவாய ஆசிரமம், இடைக்காட்டு சித்தர் குடில் ஆகியவற்றின் சார்பிலும் அன்னதானம், பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதேபோல் அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொது தரிசன வரிசையில் சுமார் 6 மணிநேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமார் 4 மணிநேரமும் காத்திருந்த பிறகே தரிசனம் செய்ய முடிந்தது. வழக்கம்போல அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டிருந்தன. பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்தும், ஆந்திரா கர்நாடகா புதுவை போன்ற பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நகருக்கு வெளியே வழக்கம்போல் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவுரையின்பேரில் திருவண்ணாமலை நகராட்சி சார்பில் ஆணையர் சுந்தராம்பாள், ஆகியோர் மேற்பார்வையிலும், தி.மலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிரிவலப் பாதையிலுள்ள ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை, வேங்கிக்கால் ஆகிய ஊராட்சிகளில் தி.மலை ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் மு.சுந்தரமூர்த்தி மேற்பார்வையிலும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.தைப்பூச தினமான நேற்று முன்தினம் கோவிலில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் கிரிவலப பாதையிலுள்ள ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. தவில் நாதஸ்வரம், உடல் இசை முழங்க வீதிவலம் வந்து ஈசான்ய குளக்கரையில் சந்திரசேகரர் வடிவாக அண்ணாமலையார் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து ஈசான்ய குளததில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்து கோவிலுக்கு சுவாமி திரும்பியபோது அண்ணாமலையாரையே தம்முடைய மகனாக பாவித்து வழிபட்ட வள்ளால மகாராஜா இறந்த செய்தியை ஓலைச்சுவடியில் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.  அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலுக்கு சுவாமி சென்றடைந்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக வரும் மாசி மகத்தன்று பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் வள்ளால மகாராஜாவுக்கு நடைபெறும் திதி மற்றும் கௌதம நதியில் நடைபெறும் தீர்த்தவாரியில் சந்திரசேகரர் எழுந்தருளுவார் என்பது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 4வது நாளாக மண்டல பூஜையும் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago