தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      விழுப்புரம்
8

விழுப்புரம்,-

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுகாதாரத்துறை சார்பாக மாவட்ட அளவிலான தட்டம்மை ரூபெல்லா  தடுப்பூசி கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தெரிவித்ததாவது: தட்டம்மை ரூபெல்லா நோயினை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதியில் இருந்து 28-ஆம் தேதி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.  தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.  தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஒன்பது மாதம் முடிவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போட்டிருந்தாலும் கூடுதலாக ஒரு தவணை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படும்.தட்டம்மை என்பது குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் உடலில் தடிப்புடன் வரும் அம்மை வகைகளில் ஒன்று.  இந்த அம்மை மற்ற அம்மைகள் போலில்லாமல் நிமோனியா எனப்படும் தீவிர நெஞ்சு சளி, ஜுரம், தீவர வயிற்றுப்போக்கு, கடும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ரூபெல்லா நோயும் அம்மை நோய்களில் ஒரு வகை தான்.  காய்ச்சல், நெறிக்கட்டி, தடிப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.  கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு, இந்நோய் தொற்று ஏற்படும் போது, கருவிற்குள் நோய் கிருமிகள் சென்று கருவை தாக்குகின்றன.  இதனால் பிறவி குறைபாடு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும்.  உலகளவில் இந்த நோய் கிட்டத்தட்ட வருடத்திற்கு ஒரு இலட்சம் குழந்தைகளை பாதிக்கிறது.தட்டம்மை ரூபெல்லா நோயினை முற்றிலும் ஒழிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை (பிப்ரவரி 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை) 876 அரசு பள்ளிகளிலும், 167 தனியார் பள்ளிகளிலும், சுமார் 1,72,789 குழந்தைகளுக்கு இந்த ஆசு தடுப்பூசி போடப்பட்டு, அனைத்து குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.  எனவே பொது மக்கள் வீண் வதந்திகளை நம்பவேண்டாம்  என்று கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.இக்கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து  டாக்டர்.ஆர்த்திகௌர், டாக்டர்.அமித், டாக்டர்.சாய்ராபானு, முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், விழுப்புரம் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், கள்ளக்குறிச்சி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ஜெமினி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: