முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்;தைகளுக்கு பாதுகாப்பான தட்டம்மை நோய் தடுப்பூசி போட சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன், தலைமையில், மாவட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தவறாமல் தட்டம்மை மற்றும் ஜெர்மன் தட்டம்மை (ரூபல்லா)-விளையாட்டு அம்மை ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகள் போடுவது குறித்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்-முதல்வர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழக அரசின் உத்தரவின்படி,  ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும்; தட்டம்மை மற்றும் ஜெர்மன் தட்டம்மை (ரூபல்லா)-விளையாட்டு அம்மை ஆகிய நோய்களை தடுப்பதற்காக தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்கள் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்திட திட்டமிடப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.  இது நாள் வரை தனியார் மருத்துவமனையில் மட்டும் கொடுக்கப்பட்டு வந்த இத்தடுப்பூசியானது பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  தமிழகம் முழுவதும் அரசின்; மூலம் கட்டணமில்லாமல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  இந்நிலையில் சமூக வலைதளங்களில் இத்தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் வதந்திகளாக பரப்பப்பட்டு வருகிறது.  இத்தகைய வதந்திகளின் காரணமாக பெற்றோர்களிடத்தில் தங்களது குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் உண்டாகும் சூழ்;நிலை நிலவி வருகிறது.  பெற்றோர்களிடத்தில் உள்ள இத்தகைய தயக்கங்களை போக்கி,  தேசிய தடுப்பூசி திட்ட வழிகாட்டு குழுவின் வழிகாட்டுதலின்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்தடுப்பூசி திட்டமானது 100 சதவீதம் பாதுகாப்பான திட்டம் என்ற எண்ணத்தினை ஏற்படுத்திட வேண்டும். தட்டம்மை மற்றும் ஜெர்மன் தட்டம்மை (ரூபல்லா)-விளையாட்டு அம்மை ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் 100 சதவீதம் விடுபடாமல் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது நமது கடமையாகும். 

இதுதவிர சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சீமைக்கருவேல மரங்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவ, மாணவியர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மாணவர்களுக்கு ஏற்படும் விழிப்புணர்வின் மூலமாக அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றுப்புறத்தார்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் சூழ்நிலை அமையும்.  தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து அகற்றிடும் வகையில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்ற எண்ணத்தினை ஏற்படுத்திட வேண்டும்.   மேலும், நடப்பு கல்வியாண்டில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் நமது மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிடும் வகையில் ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக ராமநாதபுரம் அரண்மனை சாலைப் பகுதியில் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார்.  இப்பேரணி அரண்மனை சாலையில் துவங்கி கேணிக்கரை வழியாக வழிவிடு முருகன் கோவில் அருகே நிறைவு பெற்றது.  ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 115 மாணவ, மாணவியர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இரா.ராம்பிரதீபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மரு. பவானி உமாதேவி, மரு.மீனாட்சி, தொடக்ககல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், இராமர் உள்பட அரசு அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்