முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

உத்தரகாண்ட் மாநிலத்தில் 69 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேலும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டாவது கட்டமாக 67 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இந்த 67 தொகுதிகளில் 34-ல் சமாஜ்வாடி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. பாரதிய ஜனதாவும் பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

720 பேர் போட்டி:

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடக்கும் 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 720 பேர் போட்டியிடுகிறார்கள். பர்காபூர் தொகுதியில் அதிகப்பட்சமாக 22 பேரும் தனாவ்ரா தொகுதியில் குறைந்தபட்சமாக 4 பேரும் போட்டியிடுகின்றனர்.  67 தொகுதிகளும் 11 மாவட்டங்களில் இருக்கின்றன. சஹரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பால், ராம்பூர், பேரேலி, அம்ரோஹா, பிலிபத், ஹெரி,ஷாஜகன்பூர், பதோவா ஆகிய மாவட்டங்களில் உள்ளன. 2 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 40 ஆயிரம் பெண் வாக்காளர்கள்.

வாக்குச்சாவடிகள்:

மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களிலும் 14 ஆயிரத்து 771 வாக்குச்சாவடி மையங்கள், 23 ஆயிரத்து 693 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 67 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் அமைச்சர் அஜம்கான் அவரது மகன் அப்துலலா அஜாம் ஆகியோர் உள்பட பல முக்கியமானவர்கள் உள்ளனர்.

உத்தரகாண்ட்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் 69 சட்டமன்ற தொகுதிகளில் 628 பேர் போட்டியிடுகிறார்கள். 74 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இதில் கர்ணபிரயாக் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் குல்தீப் சிங் கன்வாசி மரணமடைந்துவிட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ்,பாரதிய ஜனதா இடையே கடும்போட்டி நிலவுகிறது. ஆனால் அதிருப்பதி வேட்பாளர்கள் 12 பேர் சுயேட்சையாக போட்டியடுவதால் தேர்தல் முடிவு குறித்து சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தீவிரபிரசாரம் செய்தார். ரிஷிகேஷி உள்பட பல இடங்களில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். ஹரித்வாரில் சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்தார். மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஹரித்வார் தொகுதியில்தான் அதிகப்பட்சமாக 12 தொகுதிகள் உள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது. முதல்வர் ஹரீஸ் ரவாத், மாநிலம் முழுவதும் சென்று தீவிரபிரசாரம் செய்தார். அவருக்கு இது முக்கியமான தேர்தலாகும்.

பாதுகாப்பு:

உத்தரகாண்ட் மாநில தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30 ஆயிரம் பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ஆயுத படையினர், மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் முதல் தடவையாக வாக்காளர் அடையாள மிஷன்கள் வைக்கப்பட்டுள்ளன.

பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் சர்ஜிக்கல் அட்டாக் நடத்தி தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன என்றார். பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாயாவதியும் பிரசாரம் செய்தார். ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்