Idhayam Matrimony

எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட தகுதி தேர்வு இல்லை: தேர்தல் ஆணையம் கைவிரிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களில் போட்டியிடுவோருக்கு தகுதித் தேர்வு நடத்தும் கோரிக்கையை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அது தங்களின் அதிகார வரம்புக்குள் வராது என்றும், நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

கல்வித்தகுதி தேவையா?
இந்தியாவில் சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவோருக்கு தனியாக கல்வித் தகுதி எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த சூழலில் நாடாளுமன்றம், சட்டப்பே ரவைகளில் வெளிநடப்புகள், கூச்சல், குழப்பம் இல்லாமல் சுமூகமாக நடைபெறுவதற்காக எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களில் போட்டியிடுவோருக்கு தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, பாரதியார் சிந்தனையாளர் மன்ற பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் கடந்த ஜூனில் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் குடியரசுத் தலைவர், ஆளுநர், சபாநாயகர் ஆகியோரின் அதிகாரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்காக தகுதித் தேர்வு நடத்த வேண்டும்.

எம்.எல்.ஏ. 35 ,எம்.பி. 40 மார்க் எடுக்கவேண்டும்:
இந்த தேர்வில் 35 மதிப்பெண் பெறுவோரை எம்.எல்.ஏ. தேர்தலிலும், 40 மதிப்பெண் பெறுவோரை எம்.பி. தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்க வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின் நிலை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட தற்கு, தகுதித் தேர்வு கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் பொது தகவல் அலுவலர் பூட்டியா பதில் அனுப்பினார்.

சட்டத்தில் உரிய திருத்தம்:
பின்னர் 5 மாதங்களாக எந்த பதிலும் இல்லாததால், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் கே.எப்.வில்பிரட் அளித்துள்ள பதிலில், “தகுதித் தேர்வு நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. நாடாளுமன்றம்தான் இப்பிரச்சினையில் முடிவு காண வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்