முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், குடிமங்கலம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் பயிர் சேதங்களை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

                திருப்பூர்  மாவட்டம்,  வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், குடிமங்கலம் மற்றும் உடுமலைப்பேட்டை  ஆகிய  ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு  உட்பட்ட பல்வேறு   பகுதிகளில்  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள  விவசாய நிலங்களின் பயிர் சேதங்களை  மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

                     திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடு வழங்குவதற்காக வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களின் வறட்சி பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துரிதமான முறையில் ஆவணங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இக்கணக்கெடுப்பு பணி விபரங்களைக் கொண்டு வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு சரியான விபரங்களை பதிவு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர்  மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

       அந்த வகையில்,  வெள்ளகோவில்  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சாம்பாளையம் ஊராட்சி மற்றும் நாகநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள ஓலப்பாளையம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில்    சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்கள்  மற்றும் கொள்ளு பயிர்களையும்,  சுமார் 9.5 ஏக்கர் பரப்பளவில் வறட்சியால் கருகிய தென்னை மரங்களையும், மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  கருப்பன்வலசு ஊராட்சி, கும்பம்பாளையத்தில்   சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் வறட்சியால் கருகிய தென்னை மரங்களையும், தூரம்பாடி ஊராட்சி நத்தப்பாளையத்தில் சுமார் 0.50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்கள் மற்றும் 0.75 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கண்வளிக்  கிழங்குகளையும், குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சென்னக்கால் வலசு பகுதியில் சுமார் 0.75 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி செடிகளையும்,  தாராபுரம்  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிக்காம்பாளையம் ஊராட்சி முண்டுவேலம்பட்டியில்   சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளங்களையும், குடிமங்கலம்  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டமங்கலம் ஊராட்சி கோட்டமங்கலத்தில்    சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் வறட்சியால் கருகிய தென்னை மரங்களையும் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவீரம்பட்டி ஊராட்சி சின்னவீரம்பட்டியில்    சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் வறட்சியால் கருகிய தென்னை மரங்களையும்  மாவட்ட கலெக்டர்  நேரில் சென்று பார்வையிட்டு நேரடியாக விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு பணிகள் குறித்தும், மேலும் விவசாயிகளின் முழு விபரங்கள் சேகரிக்கப்படும் பணிகளை துரிதமாகவும் மற்றும் விரைவாகவும் முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தினார்கள்.

           இந்த ஆய்வின்போது தாராபுரம் சார் கலெக்டர் கிரேஸ் பச்சாவு  வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ரெங்கநாதன், வட்டாட்சியர்கள் வெங்கிடலட்சுமி (காங்கேயம்), அம்சவேணி (தாராபுரம்) தயானந்தன் (உடுமலைப்பேட்டை) வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், குடிமங்கலம்  மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்