முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய சினிமாக்களை டி.வி.க்களில் ஒளிபரப்ப பாகிஸ்தான் கோர்ட் அனுமதி

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - இந்திய மொழி திரைப்படங்களை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பாகிஸ்தான் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இந்திய ராணுவம் அதிரடி
காஷ்மீரில் உள்ள உரி ராணுவ தளத்தின் மீது கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதில் பல பயங்கரவாதிகளும், சில பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

கலைஞர்களுக்கு தடை
உரி தாக்குதலை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே இயல்புநிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்றுவதற்கு தடை விதிப்பதாக  இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், தீர்மானம் நிறைவேற்றியது.

சானல்களுக்கு தடை
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் சினிமா துறை, அங்கு இந்திய சினிமாக்கள் (குறிப்பாக இந்தி திரைப்படங்கள்) திரையிடுவதை நிறுத்திவிட்டது. பாகிஸ்தானில் அனைத்து இந்திய தொலைக்காட்சி சானல்களுக்கும் அக்டோபர் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

கடும் நடவடிக்கை
பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இதற்கான உத்தரவை வெளியிட்டது. பல உள்ளூர் தனியார் சானல்கள் இந்திய தொலைக்காட்சி விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்களை அனுமதியின்றி ஒளிபரப்புவதாகவும் புகார்கள் வருகின்றன. 15-ம் தேதிக்கு மேல் இந்திய தொலைக்காட்சி சானல்களோ, வினியோகம் செய்யும் நெட்வொர்க் அமைப்புகளோ இந்த தடையை அமல்படுத்த தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டது.

வசூலில் சாதனை
பாகிஸ்தான் ரசிகர்களிடையே இந்தி படங்களுக்கு மவுசு அதிகம் என்பதால் அங்கு திரையிடப்படும் படங்கள் வசூலில் சாதனை படைத்து வந்தன. அங்கு இந்தி படங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் சினிமா வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள திரையரங்கங்களில் இந்தி உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

உயர்நீதி மன்றத்தில் வழக்கு
இதையடுத்து, திரையரங்களில் இந்திய சினிமாக்கள் வெளியிடப்படுவதால் தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய சினிமாக்கள் ஒளிபரப்படுவது தொடர்பாக விதிக்கப்பட்ட தடையையும் விலக்க வேண்டும் என லியோ கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் பாகிஸ்தானில் உள்ள லாகூர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த லாகூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி சையத் மன்சூர் அலி ஷா, இந்திய மொழி திரைப்படங்களை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்