முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளி ஆய்வில் இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது : அயல்நாட்டு ஊடகங்கள் பாராட்டு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி -  ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் அனுப்பி வரலாற்று சாதனை படைத்ததையடுத்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய மிக முக்கியமான நாடாக உருவெடுத்துள்ளது என்று அயல்நாட்டு ஊடகங்கள்  பாராட்டுக்களை தெரிவித்துள்ளன. இஸ்ரோ நேற்று  முன்தினம் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்டில் வானிலை கணிப்பு கார்ட்டோசாட்-2 செயற்கைக் கோள் மற்றும் 103 நேனோ சாட்டிலைட்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது.

வாஷிங்டன் போஸ்ட்:
இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடும் போது, “இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு இன்னொரு வெற்றி. குறைந்த செலவில் தயாரிக்கப்படும் செயற்கைக் கோள்கள் மூலம் இந்தியா விண்வெளி சந்தையில் கவனம் பெற்றுள்ளது. இந்தியா ஏற்கெனவெ கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை அனுப்பியது” என்று கூறியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் :
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிடுகையில், “104 செயற்கைக் கோள்களை சில நிமிடங்களில் விண்வெளியில் செலுத்தி, முந்தைய சாதனையைக் காட்டிலும் மும்மடங்கு சாதனையை நிகழ்த்தி, இந்தியா விண்வெளி கண்காணிப்பு மற்றும் தொடர்புபடுத்தல் புலத்தில் வளரும் வணிகச் சந்தையாக இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது. இது மிகவும் ரிஸ்க் உடைய திட்டமாகும். ஏனெனில் மணிக்கு 17,000 மைல்கள் வேகத்தில் செல்லும் ராக்கெட்டிலிருந்து செயற்கைக் கோள்கள் விரைவு கதியில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும் போது பாதை தவறினால் சாட்டிலைட்கள் ஒன்றோடு ஒன்று மோத வாய்ப்புள்ளது, அதனால்தான் இந்தத் திட்டம் ‘ஹை-ரிஸ்க்’ என்று கருதப்படுகிறது. அமெரிக்காவையும்-ரஷ்யாவையும் மறந்து விடுவோம் உண்மையான விண்வெளிப்பந்தயம் ஆசியாவில்தான் நிகழ்ந்துள்ளது” என்று எழுதியுள்ளது.

லண்டன் டைம்ஸ்:
லண்டன் டைம்ஸும் 104 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக இந்தியா செலுத்தியுள்ள சாதனையையடுத்து விண்வெளி ஆய்வில் சிறந்து விளங்கும் பெரிய நாடுகளுடன் இணையும் தங்கள் முனைப்பை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளது. மேலும் ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி திட்டங்களுக்கு ஆகும் செலவினங்களை விட இந்திய விண்வெளித்திட்டம் மிகக் குறைந்த செலவிலேயே நடந்தேறி விடுகிறது என்று கூறும் லண்டன் டைம்ஸ், இஸ்ரோவின் செவ்வாய் கிரக திட்டத்துக்கு ஆன செலவு 73 மில்லியன் அமெரிக்க டாலர்கள்தான் ஆனால் நாஸாவின் மாவென் செவ்வாய்க் கிரக பயணத்துக்கு ஆன செலவு 671 மில்லியன் டாலர்கள் என்று அதிசயித்துள்ளது.

பிரிட்டனின் கார்டியன் நாளிதழ் :
பிரிட்டனின் கார்டியன் நாளிதழும், விண்வெளிச் சந்தையில் இந்தியா ஒரு பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்று பாராட்டியுள்ளது. “இந்தியா 1980-ல் தனது சொந்த ராக்கெட்டை அறிமுகம் செய்தது அதிலிருந்து விண்வெளி ஆய்வுக்கு சிறந்த முன்னுரிமை அளித்து வருகிறது” என்று கார்டியன் கூறியுள்ளது.

பி.பி.சி. செய்தி நிறுவனம் :
பிபிசி கூறும்போது, “104 செயற்கைக் கோள்களை நிமிடத்தில் வெற்றிகரமாக இஸ்ரோ செலுத்திய சாதனையின் மூலம் பல-பில்லியன் டாலர்கள் பெறுமான விண்வெளிச் சந்தையில் இந்தியா சக்தியாக உருவெடுத்துள்ளது” என்று கூறியுள்ளது.சீனாவின் அரசு ஊடகமும் இந்தியாவின் இந்தச் சாதனையை அங்கீகரித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்