முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் சேர்ந்த மேலும் ஒரு கேரள வாலிபர் டெல்லி விமான நிலையத்தில் கைது

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் சேர்ந்த மேலும் ஒரு கேரள வாலிபரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்தனர்.

ரகசிய விசாரணை
கேரள மாநிலத்தில் இருந்து கடந்த ஆண்டு வளை குடா நாட்டுக்கு சென்ற சிலர் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் இணைந்து விட்டதாக இந்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கேரளாவில் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 22 பேருக்கு ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தீவிரவாதிகள் கைது
அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தேசிய புலனாய்வு அமைப்பினர் நடவடிக்கை எடுத்தனர். அப்போது கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கனகமலை பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் சிலர் போலீசாரின் பிடியில் சிக்கினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஐ.எஸ். உடன் தொடர்பு
அவர்கள் கொடுத்த தகவலில் காசர்கோடு பகுதியை சேர்ந்த மொய்னூதீன் பார்கடவாத் என்ற வாலிபருக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மொய்னூதீன் பார்கடவாத் அபுதாபி நாட்டில் இருந்தபடி ஐ.எஸ். அமைப்பினருக்கு பண உதவி செய்து வந்ததும், இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டம் வகுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிர கண்காணிப்பு
எனவே அவரை உடனடியாக பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மொய்னூதீன் பார்கடவாத் கடந்த செவ்வாய்கிழமை அபுதாபியில் இருந்து விமானம் மூலம் டெல்லி வருவதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் டெல்லி விமான நிலையத்திற்கு மாறுவேடத்தில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கைது - விசாரணை
இதில் நேற்று முன்தினம் அவர் அபுதாபியில் இருந்து டெல்லி வந்த போது விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் கையில் சிக்கினார். அவரை உடனே ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர் இந்தியாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தவர்களுக்கு பண உதவி செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் இங்கு நாச வேலைகளுக்கு சதி திட்டம் தீட்டியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்