எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராக பதவியேற்றார் : 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      தமிழகம்
Palanisamy oath(N)

சென்னை  - தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதன்மூலம் தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீடித்த அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு நேற்று ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஒ.பி.எஸ் தியானம்
அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், அதைத்தொடர்ந்து அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று திடீர் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கட்டாயத்தின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டார்.

வழக்கில் தீர்ப்பு
இதையடுத்து அ.தி.மு.கவில் விரிசல் ஏற்பட்டது. முதல்வராக பதவியேற்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கவர்னரை சந்தித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா உரிமை கோரினார். அதே நேரம் ஒ.பன்னீர்செல்வமும் கவர்னரை சந்தித்து தனது ராஜினாமாவை திரும்ப பெற விரும்புவதாக கோரிக்கை வைத்தார். இந்த நிலையில், சசிகலா மீதான வழக்கில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சரணடைந்தார்.


எடப்பாடிக்கு அழைப்பு
அவ்வாறு அவர் சரணடையும் முன் அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவை எடப்பாடி பழனிச்சாமி இருமுறை சந்தித்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதேபோல் ஒ.பன்னீர்செல்வமும் கவர்னரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இப்படியாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழக அரசியலில் ஒரு நிச்சயமற்ற தன்மை நீடித்து வந்தது. கவர்னர் யாரை அழைப்பார் என்கிற ஒரு எதிர்பார்ப்பும் பரபரப்பும் தமிழகத்தில் நிலவி வந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று கவர்னர் மாளிகை சென்றார் எடப்பாடி பழனிச்சாமி அப்போது ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

கொண்டாட்டம்
இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதும் அ.தி.மு.க தொண்டர்கள் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தமிழகத்தில் பல பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் அரங்கேறின.  இந்நிலையில் கவர்னர் மாளிகையில் நேற்று மாலை சுமார் 4.37 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது.

முதல்வரானார் எடப்பாடி
எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார். தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, செல்லூர் ராஜூ, காமராஜ், ராஜலட்சுமி, வளர்மதி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 30 அமைச்சர்கள் நான்கு பகுதிகளாக இருந்து பதவியேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி 20 நிமிடங்களில் நிறைவடைந்தது. முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொடுத்து கொடுத்து கவர்னர் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, விழா நடக்கும் இடத்திற்கு வந்த கவர்னரை எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கவர்னரின் துணைவியாருக்கும் பூங்கொத்து வழங்கப்பட்டது.  முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் கவனித்து வந்த உள்துறை, காவல், நிதி ஆகிய துறைகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார். ஒ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நெடுஞ்சாலை, பொதுப்பணி ஆகிய துறைகளும் தற்போது முதல்வர் பழனிசாமியிடமே உள்ளன.

பெரும்பான்மையை நிரூபிக்க கெடு
அ.தி.மு.கவின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி 3-வது முறையாக கவர்னர் வித்யாசாகர் ராவை நேற்று காலை 11.30 மணிக்கு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அவரை ஆட்சியமைக்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆட்சியமைத்த பின்னர் அடுத்த 15 நாட்களில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கவர்னர் கூறியுள்ளார்.

அமைச்சரானார் செங்கோட்டையன்
நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போதிலிருந்து நீண்ட காலமாக அமைச்சரவையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மேலும், புதிய அமைச்சரவைப் பட்டியலில் திண்டுக்கல் சீனிவாசன் பெயரானது முதல்வருக்கு அடுத்த இடத்தில் இருந்தது. ஒ.பன்னீர்செல்வம் கவனித்து வந்த நிதித் துறையை முதல்வராக பதவியேற்க இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கூடுதலாக கவனிக்க இருக்கிறார். மற்றபடி, ஒ.பன்னீர் செல்வம் அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் அதே துறையின் அமைச்சர்களாக தொடர்கின்றனர்.