முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘சிவராத்திரி’ என்ற சொல்லுக்கு ‘மோட்சம் அருள்வது’ என அர்த்தம்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

உலகின் மிகவும் பழைமையான ரிக் வேதத்தில் சிவனது திருப்பெயர்கள் வருகின்றன. ‘சிவன்’ என்பது மிகவும் புராதன சொல். இதற்கு கல்யாணம் மங்களம், சுபம், நன்மை, மகிழ்ச்சி, லட்சுமிகரம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.

பொதுவாக, தெய்வங்களை மிகவும் மரியாதையாக ‘மகா’ என்ற அடைமொழியுடன் அழைக்கிறோம். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, மகாகணபதி.... இப்படி அதுபோல் ‘மகா சிவன்’ என்று சிவனை அழைப்பதில்லை. அதற்குப் பதிலாக ‘சதாசிவன்’ என அழைக்கிறோம்.

‘சதா’ என்பது சிறப்பான சொல் ! இதற்கு எங்கும், எப்போதும், என்றும் இப்படிப் பொருள் கொள்ளலாம். அதாவது, எங்கும் - எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவர்.

தெங்வங்களுக்குத் திருவிழாக்களும் ஏராளம் தேவியின் மகிமையைப் போற்றுவது ‘நவராத்திரி’ ஈசனின் பெருமையைச் சிறப்பிப்பது சிவராத்திரி.

வேதங்களில் சாமமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ.. அதுபோல் விரதங்களில் மிகவும் உயர்ந்தது ‘மகா சிவராத்திரி விரதம்;’ என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

மாதா மாதம் சிவராத்திரி வரும் என்றாலும், மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி தினத்தை காலத்தில் வரும் சதுர்த்தசி தினத்தை ‘மகா சிவராத்திரி’ என்று போற்றி வழிபாடு செய்கிறோம். அன்றைய தினம் அனைத்து சிவ ஆலங்களிலும் விடிய விடிய நான்கு யாமங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கும்.

சூரியன் அஸ்தமனமான பின் தொடங்குவது முதல் யாம பூஜை. அடத்து இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நான்காம் யாமம் என்று இந்த வழிபாடு மறுநாள் அதிகாலை சூரியன் உதயமாவதற்குள் பூர்த்தி ஆகிவிடும்.

‘மகா சிவராத்திரி” பூஜையை முதலில் அம்பிகையே தொடங்கி வைத்தாள் என்று புராணங்கள் சொல்லும். இவ்வழிபாட்டில் மிகவும் மகிழ்ந்த ஈசன், உமைக்குத் தன் அருளை வழங்கினான். அப்போது “நான் செய்த இந்த நான்கு யாம வழிபாட்டை எவர் ஒருவர் செய்த கடைபிடிக்கிறாரோ.. அவருக்கு அனைத்து விதமான நலன்களையும் வழங்கி, இறுதியில் மோட்சம் தந்தருள வேண்டும்” என்று பிரார்த்திக்க அதன்படி ஈசன் அருளினானாம்.

‘சிவராத்திரி’ என்ற சொல்லுக்கு ‘மோட்சம் அருள்வது’ என அர்த்தம்

‘மகா சிவராத்திரி’ காலத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சர்வேஸ்வரனை பூஜிப்பதாக ஐதீகம் எனவேதான் புனிதமான இந்நாளில் உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் விடிய விடிய வழிபாடு நடக்கிறது.

மார்ச் 7ந்தேதி (திங்கள் கிழமை) ‘மகா சிவராத்திரி’ வருகிறது. மாதம்தோறும் வரும் மற்ற சிவராத்திரிகளில் இறைவனை வழிபாட்டு நாம் பெறும் எல்லா நலன்களையும் மாசி மாத சிவராத்திரி மட்டுமே வழங்குவதால், இதை ‘மகா சிவராத்திரி’ என்று போற்றுகிறோம்.

சிவராத்திரியின் பெருமையை சிவமகா புராணம் ஸ்கந்த புராணம், பத்ம புராணம் போன்றவை எடுத்துரைக்கின்றன. சிவபெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டு விரதங்களைப் பரிந்துரைக்கின்றன நூல்கள். அவை சோம வார விரதம், திருவாதிரை விரதம், உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம், ரிஷப விரதம்.

இவ்விரதங்களில் மிகவும் சிறப்பானது ‘மகா சிவராத்திரி’ விரதமாகும். எண்ணற்ற சிவ பக்தர்கள் அன்றைய தினம் முழுக்க விரதம் மேற்கொண்டு இல்லத்தில் பகலில் சிவ பூஜைகளைச் செய்துவிட்டு, மாலை வேளையில் சிவாலயங்களுக்குச் செல்வர்.

‘மகா சிவராத்திரி’ உலகம் முழுக்க பிரபலம். வட இந்தியாவில் உள்ள சிவாலயங்களில் இறைவனைத் தொட்டு நாமே அபிஷேகம் செய்யலாம். ஆனால் தென்னகத்தில் அது சாத்தியம் இல்லை.

மகா சிவராத்திரி அன்று காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் மிகவும் ஜெகஜோதியாகக் காட்சி தரும். லட்ச தீபம் ஏற்றப்படும். ராமேஸ்வரம் ராமநாதருக்கு ஆயிரம் குடங்களில் புனிதமான நீரைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும் வேத மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்ட ஆயிரம் சங்குகளின் நீரைக் கொண்டு விஷேச அபிஷேகம் நடக்கும்.

நேபாளத்தில் பசுபதிநாதர் ஆலயத்தில் லட்ச தீபம் ஏற்றப்டும். நேபாள மன்னர் தன் சொந்த செலவில் ‘மகா சிவராத்திரி’ வழிபாட்டை நடத்துவார். இமயமலையில் வசிக்கின்ற எண்ணற்ற சாதுக்கள் பெரும் திரளாகத் திரண்டு வந்து பசுபதிநாதரை வணங்குவார்கள்.

ஸ்ரீசைலம், காளகஸ்தி, சென்னை மயிலாப்பூர், திருவண்ணாமலை, மதுரை போன்ற எண்ணற்ற திருத்தலங்களில் விடிய விடிய பல்லாயிரக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

சிவபெருமானுக்கு அபிஷேகம் சிறப்பு. எனவே, மகா சிவராத்திரி தினத்தில் நான்கு யாமங்களிலும் ஈசனுக்கு நடக்கின்ற விசேஷமான அபிஷேகத்தை நாம் தரிசித்தல் நலம். நம்மால் முடிந்த அபிஷேக திரவியங்களை வாங்கிக் கொடுத்தால் கூடுதல் மகிமை. ஒருவேளை வாங்கித் தருவதற்கு வசதி இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். சிவனுக்கு மிகவும் உகந்த வில்வத்தையாவது அர்ப்பணித்து வணங்கவும்.

‘ஒரே ஒரு வில்வ இலையை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தாலே முந்தைய மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் அகன்றுவிடும்’ என்று புராணங்கள் கூறுகின்றன. வில்வ இலைகளை அர்ப்பணித்து எவர் ஒருவர் தன்னை வணங்கினாலும், அவரை எத்தகைய துயரில் இருந்தும் காப்பாற்றி அருள்வார் சிவபெருமான். அதுவும் புனிதமான ‘மகா சிவராத்திரி’ யில் வில்வ இலையை லிங்கத் திருமேனிக்கு சமர்ப்பித்தால் கோடிக்கணக்கான மலர்களைக் கொண்டு வழிப்பட்டதற்கு சமம்.
‘மகா சிவராத்திரி விரதம்’ மேற்கொள்வது எப்படி

அன்றைய தினம் இரவு முழுக்கக் கண் விழித்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபாட்டால் நினைத்த காரியம் நடக்கும்.

விரதம் இருப்பவர்கள்முதல் நாள் பகல் பொழுதில் மட்டும் உணவு அருந்தவும், அடுத்த நாள் ‘மகா சிவராத்திரி’ காலையில் குளித்துவிட்டு, சிவபெருமானுக்கு உண்டான வழிபாடுகளைச் செய்யவும். மாலையில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்யுங்கள்.

நான்கு யாமங்களிலும் ஒரே சிவாலயத்தில் இருந்து வழிபட்டாலும் சரி.. அல்லது ஒவ்வொரு யாதத்துக்கும் ஒரு சிவாலயம் சென்று தரிசித்தாலும் சரி நான்காம் யாமம் தரிசித்த பின் இல்லம் வந்து நீராடவும். அதன் பின் முடிந்த அளவுக்கு சிவனடியார்களை அழைத்து அவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டுத் தானும் உண்ணவும் விரதம் என்பது ஒரு கட்டுப்பாடு உணவையும் உறக்கத்தையும் விலக்கினால்தான் புலன்கள் கட்டுப்படும். புலன்கள் கட்டுப்பட்டால் தான் இறை இன்பம் பெற முடியும்.

சிவராத்திரி அன்று முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள்.. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு யாம பூஜை பூர்த்தியான பிறகு பால் பருகலாம். பழங்கள் உண்ணலாம். தண்ணீர் அருந்தலாம். சுர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பு இல்லாமல் அவித்துச் சாப்பிடலாம். சக்தி தரும் சத்துமாவை வெல்லத்துடன் கலந்து உட்கொள்ளலாம்

‘மகா சிவராத்திரியில் எப்பேர்பட்ட கொடுடையானவர்களும் சிவனை தரிசித்தால் இறைவனின் பரிபூரண ஆசி உண்டு. இதை விளக்கும் விதமாக எத்தனையோ புராணக் கதைகள் கூறப்பட்டாலும் பொதுவாகச் சொல்லப்படுவது இதுதான்.

அடர்ந்த வனத்தில் நள்ளிரவில் சிக்கிக்கொண்ட வேடன் ஒருவன் பாதுகாப்புக்காக இடம் தேடும்போது புலி துரத்த ஆரம்பித்தது. பயத்தின் காரணமாக அலறி அடித்தபடி ஒரு மரத்தின் மீதேறி வலுவான கிளையில் அமர்ந்து கொண்டான். துரத்தி வந்த புலி இவன் எப்படியும் கீழே இறங்குவான் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மரத்தின் அடியில் அமர்ந்துவிட்டது.

புலி நகர்வதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட வேடனும் மரத்திலேயே இருந்தான. நாம் தூங்கக்கூடாது.. தூக்கத்தில் கீழே விழுந்துவிட்டால், புலிக்கு இரையாகிவிடுவோம் என்று பயந்து தான் அமர்ந்த மரத்தில் இருந்து இலைகளை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் பிய்த்துக் கீழே போட்டான்.. மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருப்பதும், அது ‘மகா சிவராத்திரி தினம் என்பதும் வேடனுக்குத் தெரியாது.

அதிகாலை மலர்ந்தது புலியைக் காணாததால் கீழே இறங்கினான். அப்போது சிவலிங்கத்தில் இருந்து ஈசன் வெளிப்பட்டு நேற்றைய தினம் மகா சிவராத்திரி உறங்கவும் இல்லை. உணவும் அருந்தாமல் விரதம் கடைபிடித்திருக்கிறாய். தவிர நீ அமர்ந்திருந்தது வில்ல மரம். எனக்கு வில்வத்தைக் கொண்டு அர்ச்சித்ததால் உனக்கு சகல நலன்களும் வழங்குகிறேன். உரிய காலத்தில் மோட்சம் தருவேன். என்று ஆசிர்வதித்து மறைந்தாராம்.

சிவராத்திரி விரதம் மேற்கொள்வதால் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு அகல்கின்றன. ஆலயங்களிலும், வீடுகளிலும் நமசிவாய மந்திரத்தை அதிகம் ஜெபிக்க வேண்டும். முக்கியமாக படிக்க வேண்டியது - திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம்.

இதை படித்தால் மனதில் இருக்கும் பயம் அகலும். தைரியம் பெருகும் தவிர சிவபுராணம் லிங்காஷ்டகம், தேவாரம் திருவாசகம் ஆகயவற்றையும் படிக்கலாம் திருவிளையாடல் புராணம் பெரிய புராணம் ஆகியவற்றைப் பிறர் சொல்லக் கேட்டாலும் அல்லது நாமே படித்தாலும் கூடுதல் பலன் பெறலாம்

புனிதமான மகா சிவராத்திரி தினத்தில் சிவலிங்கத் திருமேனியை தரிசித்து தீங்கு இல்லா வாழ்வு பெறுவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்