தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் 570 குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது : கலெக்டர் அண்ணாதுரை தகவல்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் 579 குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துகளிலும் குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மழைநீரை சேமிக்க வறட்சி காலங்களில் ஏரி, குளங்களை தூர்வாருதல் மிகவும் அவசியம் அவ்வாறு தூர் வாரும் விதமாக விவசாய பெருமக்கள் தங்கள் வயலுக்கு அருகாமையில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மற்றும் சவுடு மண் ஆகியவற்றை எடுத்து தங்கள் வயலில் இட்டு மண் வளம் கூட்டிட அரசின் உரிய வழிகாட்டு முறையின்படி எடுத்து கொள்ள அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏரி, குளங்களிலிருந்து எடுக்கப்படும் மண் மற்றும் வண்டல் ஆகியவற்றை விவசாய நிலங்களில் இடுவதன் மூலம் வயல்களில் மண்ணின் நயம் மற்றும் வளம் அதிகரிப்பதோடு, நீர் பிடிக்கும் திறனும் மேம்படும்.

 

விவசாய நிலங்கள்

 

அரசாணை எண். 233 பொதுப்பணித்துறை நாள். 23.09.2015 ன்படி பொதுமக்கள் தங்களது விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்குத் தேவையான வண்டல் மண்ணை அருகில் உள்ள பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அல்லது பஞ்சாயத்திற்கு சொந்தமான குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து 5 வண்டி வரை இலவசமாக எடுத்துக் கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே தங்களது வயலுக்கு அருகாமையில் உள்ள குளம் மற்றும் ஏரியிலிருந்து மண் (வண்டல் மண் மற்றும் சவுடு மண்) எடுப்பதற்கு விரும்பும் வேளாண் பெருமக்கள் தங்களது விண்ணப்பங்களை உதவி இயக்குநர் கனிமம் மற்றும் சுரங்கத்துறைக்கு அனுப்பி உரிய அனுமதி பெற்று பயனடைய மாவட்ட கலெக்டர் ஆ. அண்ணாதுரை கேட்டுகொண்டுள்ளார்.


 

இதை ஷேர் செய்திடுங்கள்: