ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை : கோவை -மதுரையில் நீதிபதி ஆய்வு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      தமிழகம்
jallikattu-protest 2017 01 24

 கோவை  - ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த வன்முறை குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன்  ஆய்வு மேற்கொண்டார். சம்பவங்கள் குறித்து அவரிடம், மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி விளக்கினார்.  போராட்டத்தின் முதல் 2 நாட்களில் சில இடங்களில் சாலை மறியல் நடைபெற்றதாகவும், அதற்குப் பிறகு 2 நாட்கள் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், கடைசி 2 நாட்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர், மாணவர்களுடன் இணைந்ததால் போராட்டத்தின் திசை மாறியதாகவும் துணை ஆணையர் தெரிவித்தார். மேலும், கடைசி 2 நாட்களில் கோவை அவிநாசி சாலை, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல் வீசித் தாக்கியதில் 4 போலீஸார் காயமடைந்த தாகவும், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப் பட்டதாகவும் துணை ஆணையர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எஸ்.ராஜேஸ்வரன், இந்தப் போராட்டத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதா என்று கேட்டார். அதற்கு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படவில்லை என்று துணை ஆணையர் தெரிவித்தார். எனினும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றதாகவும், போலீஸார் மிகுந்த பொறுமையுடன் போராட்டக்காரர்களைக் கையாண்டதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்களா என்று கேட்டதற்கு, சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது, கோவையில் ரயிலை மறித்து மாணவர்கள் போராடவில்லை என்றார். மேலும், போராட்டம் தொடர்பான புகைப்படங்கள், பல்வேறு விவரங்கள் அடங்கிய அறிக்கையை எஸ்.ராஜேஸ்வரனிடம், துணை ஆணையர் வழங்கினார்.

தொடர்ந்து, காந்திபுரம் பேருந்து நிலையம், போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபம், கொடிசியா வளாகம், சி.ஐ.டி. கல்லூரி வளாகப் பகுதிகளில் அவர் ஆய்வுமேற்கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


மதுரையில் ஆய்வு : இதேபேல  நீதியரசர் ராஜேஸ்வரன் நேற்று மதுரை வந்து ஆய்வு மேற்கொண்டார். மதுரை தமுக்கம் மைதானத்தில்  நடந்த சம்பவங்களை அவர் கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: