ஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பு போலீசார் தீவிர பாதுகாப்பு
சென்னை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டு முன்பு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது.அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று முன் தீனம் காலையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதன்படி முதல்- அமைச்சராக பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார்.முன்னதாக நேற்று முன் தீனம் பிற்பகலில் அடையாறில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் கூடி இருந்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.இந்த நேரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டு முன்பும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். இதற்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், சி.வி.சண்முகத்தின் ஆட்களால் சரமாரியாக தாக்கப்பட்டனர். ஓ.பி.எஸ். வீட்டின் மீது சரமாரியாக கற்களும் வீசப்பட்டன.இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவில்பட்டியைச் சேர்ந்த முன்னாள் வட்ட செயலாளர் பாலாஜி, ஆயுதப்படை போலீஸ்காரர் சங்கர நாராயணன் ஆகியோரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.இச்சம்பவம் பற்றி அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் நடத்திய இந்த தாக்குதலுக்கு ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் தொண்டர்கள் கிடையாது. அனைவரும் ரவுடிகள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டு முன்பு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன