முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்களுக்கான பணி ஆய்வு கூட்டம் சத்துணவு திட்ட இயக்குநர் அமுதவள்ளி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சி.அ.ராமன், முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் சத்துணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் கலவை சாதங்கள், முட்டைகள் ஆகியவை எவ்வாறு நாள்தோறும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது என்பதையும், இவற்றை அலுவலர்கள் எவ்வாறு ஆய்வு மேற்கொள்கின்றனர் என்பதையும், மேலும் சத்துணவு மைங்களில் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் மற்றும் குறைபாடுகளை களைய தேவையான ஆலோசனைகள் எவை என்பதனையும் வட்டாரம் வாரியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர்களிடம் சத்துணவு திட்ட இயக்குநர் அமுதவள்ளி, கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து சமூக நலத்துறையின் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி திட்டம், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகங்கள், தொட்டில் குழந்தை திட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம் போன்ற திட்டங்கள் குறித்து வட்டாரம் வாரியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.பின்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள 2374 சத்துணவு மையங்களுக்கு சத்துணவு திட்டத்துறையின் மூலம் ஆண்டிற்கு ரூ.1640 கோடி செலவிடப்படுகிறது. இந்நிதி அலுவலர்களின் மாதாந்திர ஊதியம், பள்ளி குழந்தைகளுக்கான சத்துணவு, முட்டைகள் மற்றும் சத்துணவு மையங்களுக்கான உட்கட்டமைப்பு பணிகளுக்கு செலவிட ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இத்தொகையினை முழுமையாக மாணவர்களுக்கு சத்துள்ள உணவுகளை எவ்வித குறைபாடுமின்றி செயல்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவற்றிற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை தலைமையிடத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைத்தால் அந்த அறிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கோப்புகளை முறையாக பத்திரப்படுத்திட வேண்டும். மேலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு தேவைப்படும் புதிய கட்டிடங்கள் குறித்து அறிக்கைகளையும் தெரிவிக்க வேண்டுமென்றும், சமையல் செய்வதற்கு தேவையான எரிவாயு இணைப்பு குறித்தும், மேலும் இணைப்பு உள்ள மையங்களில் எரிவாயு உருளை பெருவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அறிக்கையாக தலைமையிடத்திற்கு அனுப்பி வைக்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் சத்துணவு திட்ட இயக்குநர் அமுதவள்ளி, கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் சந்தியா மகேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோதண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்