தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      தமிழகம்
TN assembly(N)

சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் சட்டப்பேரவையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். எதிரணியான ஓ.பன்னீர்செல்வம் அணியில் குறைந்தபட்ச எம்.எல்.ஏ.க்களே இருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால், நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக இன்று சட்டசபை கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக ஆயத்தமாகி வரும் எடப்பாடி பழனிச்சாமி, எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஒருங்கிணைத்து வாக்களிக்க ஏற்பாடுகளை செய்ய உள்ளார். அதற்கேற்ப, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளும் தங்கள் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டமன்றத்தில் ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், ஆளுங்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதால் தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டசபை வளாகத்திற்குள் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர பார்வையாளர்களுக்கு இன்று அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்: