நாட்டின் பொருளாதாரம் விரைவில் வளர்ச்சி அடையும்: ரிசர்வ் வங்கி

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Reserve Bank 2017 01 18

புதுடெல்லி  - நாட்டின் பொருளாதாரம் விரைவில் மீண்டும் வளர்ச்சி அடையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.  உயர்மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் கடந்தாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (வளர்ச்சி)  6.9 சதவீதமாக குறைந்தது. ஒட்டுமொத்த உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இல்லை என்று ஒரு பேட்டியின் போது தெரிவித்தார்.

இந்தநிலையில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது குறைந்திருந்தாலும் அது விரைவில் வீழ்ச்சியில் இருந்து மீண்டும் எழும் என்று கவர்னர் படேல் தெரிவித்துள்ளார். திறந்தவெளி வர்த்தகத்தால் இந்தியா பயன் அடைந்து வந்தது. ஆனால் அமெரிக்கா அதிபராக பதவி ஏற்றிருக்கும் டிரம்ப் வர்த்தக பாதுகாப்பு கொள்கையை அறிவித்திருப்பதால் இந்தியாவை மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும். இருந்தபோதிலும் இதையும் மீறி வரும் 2017-2018 ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீகமாக இருக்கும் என்றார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் புழக்கத்தில் இருந்த 84 சதவீத ரூபாய் முடங்கிப்போனது. இதை சரிக்கட்ட புதிய ரூபாய் நோட்டுகள் விரைவாக அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. பற்றாக்குறையை சரிக்கட்ட இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்றும் படேல் தெரிவித்தார். இந்தியாவில் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி விரைவில் ஏற்படுமா என்று கேட்டதற்கு நிலையான பொருளாதார வளர்ச்சி குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லமுடியாது என்று பதில் அளித்தார்.  


இதை ஷேர் செய்திடுங்கள்: