ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன், வியாழக்கிழமை நாள்களில் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் புதன்கிழமை அடிமாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகள், வளர்ப்பு கன்றுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

  இச்சந்தைக்கு ஈரோடு மட்டுமன்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகளைக் கொண்டு வருகின்றனர். இவற்றைக் கொள்முதல் செய்ய தமிழகம் மட்டுமன்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால், கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கேரள வியாபாரிகள்


 இதன் எதிரொலியாக, மாடுகளுக்குப் போதிய விலை கிடைக்காதபட்சத்திலும் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை செய்ய முன்வருகின்றனர். இதனால், வியாழக்கிழமை நடைபெற்ற கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு ஏராளமான மாடுகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.  இதுகுறித்து கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை மேலாளர்ஆர் முருகன் கூறியதாவது     கடும் வறட்சியால் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விற்பனைக்காக கொண்டு வரப்படும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் 550 பசு மாடுகள், 500 எருமைகள், 300 வளர்ப்புக் கன்றுகள் விற்பனைக்கு வந்தன.

  பசுமாடு ரூ. 16,000 முதல் ரூ. 33,000 வரையிலும், எருமை ரூ. 18,000 முதல் ரூ. 34,000 வரையிலும், வளர்ப்புக் கன்றுகள் ரூ. 1,000 முதல் ரூ. 9,000 வரையிலும் விற்பனையானது. வறட்சி நீங்கி தீவனத் தட்டுப்பாடு விலகும் வரையில் விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். மகாராஷ்டிரம், கேரள வியாபாரிகள் அதிக அளவில் வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்: