முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஏற்க ராபர்ட் ஹார்வர்ட் மறுப்பு

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு டிரம்ப்பால் தேர்வு செய்யப்பட்ட ராபர்ட் ஹார்வர்ட் பதவியை ஏற்க மறுத்து விட்டார்.

பிளின் ராஜினாமா
ரஷியாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின், கடந்த சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து மைக்கேல் பிளின் இடத்துக்கு ஓய்வு பெற்ற கடற்படை உயர் அதிகாரி ராபர்ட் ஹார்வர்டை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார்.

ஹார்வர்ட் மறுப்பு
இது தொடர்பாக அவருடன் டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஏற்க இயலாது என நிராகரித்து விட்டார். இதுதொடர்பாக ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனது குடும்பம் மற்றும் நிதி சூழல்களால் தன்னால் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஏற்க இயலாது என ராபர்ட் ஹார்வர்ட் கூறி விட்டார்” என கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் மறுப்பு
இந்த நிகழ்வுக்கு முன்னதாக தனது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிற குளறுபடிகளை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், தனது நிர்வாகம் புதிதாக சீர்செய்யப்பட்டுள்ள ஒரு எந்திரம் போல இயங்கிக்கொண்டிருக்கிறது என குறிப்பிட்டார். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்த ராபர்ட் ஹார்வர்ட் அதை ஏற்க மறுத்து விட்டார் என்பது பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

ஹார்வர்ட் விளக்கம்
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ராபர்ட் ஹார்வர்ட், “பணி ரீதியிலும், தனிப்பட்ட முறையிலும் எனது தேவைகளை கவனித்துக்கொள்ள டிரம்ப் நிர்வாகம் முன்வந்தது. ஆனாலும் முற்றிலும் தனிப்பட்ட காரணங்களால் இந்தப் பதவியை ஏற்க முடியவில்லை” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்