முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: : தமிழக காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் தகவல்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான எந்த நடவடிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்காமல் மேற்கொள்ளமாட்டோம் என காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கூறப்பட்டது.

மேற்பார்வைக்குழு கூட்டம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் அம்ரீந்தர் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தமிழக வலியுறுத்தல்
கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மேற்கொண்டுள்ள முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மேலும் தமிழகத்தின் வறட்சி நிலவரம் குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
இதற்கு பதிலளித்த மத்திய அரசு அதிகாரிகள், நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க இருப்பதாகவும், இது தொடர்பாக 4 மாநிலங்களும் ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இந்த குழுவில் ஐ.ஐ.டி.யில் நதிநீர் பங்கீடு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிபுணர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது.கூட்டம் முடிந்து வெளியே வந்த காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘காவிரி தண்ணீர் தொடர்பான புள்ளி விவரங்கள் பற்றியே கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரில் இன்னும் பாக்கி உள்ளது. அதை தரச்சொல்லி வற்புறுத்தி இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரம்
மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டோம் என்று கர்நாடக அதிகாரிகள் கூறியதாக தெரிவித்த சுப்பிரமணியன், இது தொடர்பாக தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாக மத்திய அரசின் அதிகாரிகளும் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். காவிரி மேற்பார்வைக்குழுவின் அடுத்த கூட்டம் அடுத்த மாதம் (மார்ச்) இறுதியில் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்