முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.வை நல்ல பாம்புடன் ஒப்பிடும் சிவசேனா

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

தானே, நல்ல பாம்புடன் பாரதிய ஜனதாவை ஒப்பிட்டு சிவசேனா தலைவர் தாக்கரே கடுமையாக தாக்கி பிரசாரம் செய்தார்.

மும்பை மாநகராட்சிக்கான தேர்தல் பிரசாரம் முடியும் தருவாயில் உள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் கூட்டணி கட்சிகளாக உள்ளன. மும்பை மாநகராட்சியை இந்த இரண்டு கட்சிகளும்தான் பிடித்து ஆட்சி செய்து வருகிறது.  இந்தநிலையில் நடக்கவுள்ள மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி இந்த இரண்டு கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சியை சேர்ந்த தலைவர்கள் பிரசாரத்தின்போது பாரதிய ஜனதாவை தாக்கி வந்தனர். தேர்தலில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் கூட்டணி வைத்திருப்பதாக குற்றச்சாட்டும் சாட்டினர்.

நல்லபாம்பு:

சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே புனேயில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பாரதிய ஜனதாவை எப்போதும் இல்லாத அளவுக்கு  கடுமையாக தாக்கி பேசினார். பாரதிய ஜனதா ஒரு நல்லபாம்பு போன்றது. அந்த நல்லபாம்புடன் நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்திருக்கிறோம். இப்போது அதன் குணத்தை காட்ட தொடங்கியுள்ளது. அதை எப்படி நசுக்குவது என்பது எங்களுக்கு தெரியும் என்றார்.
முன்பு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்த தவறை நாங்கள் திரும்பவும் செய்யமாட்டோம். இனிமேல் பாரதிய ஜனதாவுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்போம். மும்பை மாநகராட்சி தேர்தலில் வார்டு ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தபோது பாரதிய ஜனதா நியாயமில்லாத கோரிக்கைகளை வைத்தது என்றார்.

மோடி மீதும் தாக்கு:

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்ட்ரா முதல்வர்  தேவேந்திர பட்னாவிஸ் மீதும் தாக்கரே குற்றஞ்சாட்டினார். மக்களிடத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்கள் சவாரி செய்கிறார்கள் என்றும் தாக்கரே கூறினார். இதற்கு முன்பு அவர் பிரசாரத்தின்போது மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாரதிய ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி வைத்துக்கொள்ளமாட்டோம் என்றும் தெரிவித்தார். மும்பை மாநகராட்சி தேர்தல் வரும் 21 -ம் தேதி நடைபெற உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்